உள்ளூர் செய்திகள்

மின்சாரம் பாய்ந்து கேங்மேன் காயம்: திருச்சி உதவி மின் பொறியாளர் சஸ்பெண்டு

Published On 2023-10-14 10:14 GMT   |   Update On 2023-10-14 10:14 GMT
  • திருச்சி மன்னார்புரத்தில் உள்ள மின்வாரிய பொறியாளர் அலுவலகம் முன்பும் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
  • மின்வாரிய அதிகாரிகள், கேங்மேன்கள் தரப்பில் நடந்த பேச்சுவார்த்தையில் சம்பந்தப்பட்ட அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.

திருச்சி:

திருச்சி தென்னூரில் உள்ள தலைமை மின்வாரிய பொறியாளர் அலுவலகத்தின் மலைக்கோட்டை பிரிவில் ராஜீவ் காந்தி என்பவர் கேங்மேனாக பணியாற்றி வருகிறார்.

இவர் இரு தினங்களுக்கு முன்பு பணியில் ஈடுபட்டபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து பலத்த காயம் அடைந்தார். பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மின் இணைப்பை துண்டிக்காமல் உரிய பாதுகாப்பு இல்லாமல் 110 கே.வி. மின் கம்பத்தில் ஏறி பணி செய்யுமாறு உயர் அதிகாரி வாய்மொழி உத்தரவிட்டதாகவும், மின்சாரம் உள்ள பகுதிகளில் அவர்களை பணியில் ஈடுபடுத்தக்கூடாது என்ற விதிக்கு புறம்பாக ராஜீவ் காந்தியை பணி செய்ய வைத்ததால் இந்த விபத்து நடந்ததாக புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவருக்கு உயரிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். விபத்துக்கு காரணமான அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மின்வாரிய தொழிற்சங்கங்கள் சார்பில் தென்னூர் மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

மேலும் திருச்சி மன்னார்புரத்தில் உள்ள மின்வாரிய பொறியாளர் அலுவலகம் முன்பும் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. பின்னர் மின்வாரிய அதிகாரிகள், கேங்மேன்கள் தரப்பில் நடந்த பேச்சுவார்த்தையில் சம்பந்தப்பட்ட அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட உதவி மின் பொறியாளர் ஆர். சரவணன் அதிரடியாக சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News