மின்சாரம் தாக்கி தேயிலை தோட்ட பெண் தொழிலாளி பலி- உடலை எடுக்க விடாமல் பொதுமக்கள் போராட்டம்
- தேயிலை தோட்டத்தின் மேல் செல்லும் உயர்மின் அழுத்த கம்பியில் ஏற்பட்ட மின்கசிவின் காரணமாக சித்தியம்மா மின்சாரம் தாக்கி இறந்தது தெரியவந்தது.
- பொதுமக்கள் இறந்த சித்தியம்மாவுக்கு தேயிலை தோட்ட நிர்வாகம் மற்றும் மின்வாரியம் சார்பில் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள தேவர்சோலையில் தனியார் தேயிலை தோட்டம் உள்ளது.
இந்த தேயிலை தோட்டத்தில் தேவர்சோலை மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த மக்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த தேயிலை தோட்டத்தின் மேல் பகுதியில் உயர் அழுத்த மின்கம்பம் செல்கிறது. இன்று காலை தேவர்சோலையை சேர்ந்த சித்தியம்மா என்பவர் தன்னுடன் வேலை பார்க்கும் 10க்கும் மேற்பட்ட பெண்களுடன் தேயிலை தோட்டத்திற்கு சென்றார்.
அங்கு அவர் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சித்தியம்மா நடந்து சென்றபோது வழுக்கி விழுந்தார். அப்போது அந்த வழியாக சென்ற மின்கம்பியை சித்தியம்மா தொட்டதாக தெரிகிறது.
அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதில் சித்தியம்மா படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது சத்தம் கேட்டதும் அருகே நின்றிருந்த மற்றொரு பெண் ஓடி வந்து அவரை காப்பாற்ற முயன்றார். இதில் அவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
இதை பார்த்து அதிர்ச்சியான மற்ற தொழிலாளர்கள் காயம் அடைந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக கூடலூர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தேயிலை தோட்டத்தின் மேல் செல்லும் உயர்மின் அழுத்த கம்பியில் ஏற்பட்ட மின்கசிவின் காரணமாக சித்தியம்மா மின்சாரம் தாக்கி இறந்தது தெரியவந்தது.
இதற்கிடையே மின்சாரம் தாக்கி இறந்த சித்தியம்மாவின் உடலை எடுக்க மறுத்து தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்கள் இறந்த சித்தியம்மாவுக்கு தேயிலை தோட்ட நிர்வாகம் மற்றும் மின்வாரியம் சார்பில் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதற்கு போலீசார் இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.