குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதி
- ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தெரு குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
- குடிநீர் கிடைக்க சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுக்க அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பாலைவனம்:
திருப்பாலைவனம் அடுத்த கள்ளூர் ஊராட்சியில் சின்னகள்ளூர், கள்ளூர் காலனி, புதுக்குப்பம், கீரைப்பாக்கம் ஆகிய கிராமங்கள் உள்ளது. இங்கு 3,500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதிக்கு 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சேகண்யம் கிராமத்தில் இருந்து ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் கொண்டுவரப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்த ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தெரு குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த குடிநீர் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் வினியோகம் செய்யப்படுவதால் ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கு தேவையான குடிநீர் கிடைப்பதில்லை.
மேலும் குடிநீர் கிடைக்க வேண்டும் என்பதற்காக குடிநீர் பைப் லைன் கீழ் பள்ளம் தோண்டி அந்த பள்ளத்தில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை தேக்கி அதிலிருந்து குடங்களில் தண்ணீரை சேகரித்து வீடுகளுக்கு பொதுமக்கள் கொண்டு செல்கின்றனர். எனவே கள்ளூர் ஊராட்சியில் உள்ள மக்களுக்கு போதுமான அளவு குடிநீர் கிடைக்க சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுக்க அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.