உள்ளூர் செய்திகள்

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள காலி இடத்தில் பட்டா வழங்கக்கோரி பொதுமக்கள் திடீர் போராட்டம்

Published On 2023-02-03 06:41 GMT   |   Update On 2023-02-03 06:41 GMT
  • புறம்போக்கு இடம். எங்களுக்கு இந்த இடத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்றனர்.
  • நிலம் யாருடையது என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

தஞ்சாவூா்:

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை மறியல், சிலோன் காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு சொந்தமாக வீடு கிடையாது. இதனால் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் நாஞ்சிக்கோட்டை சாலை பால்பண்ணை எதிரில் மழைநீர் செல்லும் வாரியை ஒட்டிய பகுதியில் உள்ள இடத்தில் இன்று காலை 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு பட்டா கேட்டு போராட்டம் நடத்தினர்.

பின்னர் கொட்டகை அமைப்பதற்கான குச்சி, கம்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்களுடன் திரண்டு வந்தனர். அவர்களுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தை கட்சியினரும் வந்தனர். பின்னர் அந்த இடத்தில் கொட்டகை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த ஏ.டி.எஸ்.பி. மோகன்தாஸ் தலைமையில் வல்லம் துணை போலீஸ் பிரண்டு நித்யா, இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் தமிழ் பல்கலைக்கழகம் போலீசார், தாசில்தார் சக்திவேல், வருவாய்த் துறையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அந்த மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதற்கு அவர்கள் இது புறம்போக்கு இடம். எங்களுக்கு இந்த இடத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்றனர்.

இதனை தொடர்ந்து அந்த நிலத்தின் உரிமையாளர் நான் தான் என கூறி ஒருவர் வந்து போலீசாரிடம் நான் சிராஜ்பூர் நகர் என உருவாக்கி இந்த இடத்தை சிறுது சிறிதாக விற்று வருகிறேன். இந்த நிலத்திற்கான பட்டா என்னிடம் உள்ளது. இது புறம்போக்கு இடம் கிடையாது. என் இடம் தான் எனக் கூறினார்.

இரு தரப்பும் மாறி மாறி கருத்து தெரிவித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வருவாய்த்துறையினர் இந்த நிலம் யாருடையது என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

தொடர்ந்து அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் பாதுகாப்புக்காக 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

Tags:    

Similar News