உள்ளூர் செய்திகள்

ஊர்க்காவல் படைவீரர்- ஜவுளிக்கடை ஊழியர் நடுரோட்டில் கட்டிப்புரண்டு சண்டை

Published On 2022-10-07 11:01 GMT   |   Update On 2022-10-07 11:01 GMT
  • ஆத்திரமடைந்த இருவரும் நள்ளிரவில் திடீரென மோதலில் ஈடுபட்டனர்.
  • அவர்கள் நடுரோட்டில் கட்டிப்புரண்டு ஒருவரையொருவர் தாக்கி சண்டை போட்டனர்.

நெல்லை:

நெல்லை சந்திப்பு காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் பிரம்மநாயகம் (வயது28). ஊர்க்காவல் படை வீரர். இவர் கடந்த 3-ந் தேதி இரவு பாதுகாப்பு பணியை முடித்து கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

அவர் வண்ணார்பேட்டை-சந்திப்பு சாலையில் சென்ற போது ஜவுளிக்கடையில் வேலை பார்க்கும் ஒருவர் அங்கு வந்தார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த இருவரும் நள்ளிரவில் திடீரென மோதலில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் நடுரோட்டில் கட்டிப்புரண்டு ஒருவரையொருவர் தாக்கி சண்டை போட்டனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. இது தொடர்பாக விசாரணை நடத்த மாநகர போலீஸ் துணைகமிஷனர் சீனிவாசன் உத்தரவிட்டார்.

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பிரம்மநாயகத்துடன் மோதலில் ஈடுபட்டது வீரவநல்லூர் அருகே உள்ள கரிசூழ்ந்தமங்கலத்தை சேர்ந்த முத்துச்சரவணன் (32) என்பதும், தாக்குதல் சம்பவத்தில் பிரம்மநாயகம், முத்துச்சரவணன் ஆகியோர் காயமடைந்து நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்தது.

தொடர் விசாரணையில் பிரம்மநாயகம் முன்பு ஜவுளிக்கடையில் வேலை பார்த்த போது அவருக்கும் முத்துச்சரவணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில் தற்போது ஊர்க்காவல் படையில் சேர்ந்து பணியாற்றி வரும் பிரம்மநாயகம் சம்பவத்தன்று சாலையில் வந்த போது அவர்களுக்கடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனை ஜவுளிக்கடை காவலாளி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News