உள்ளூர் செய்திகள்

பள்ளி வளாகத்தில் உச்சி வெயிலில் முட்டி போட்டுள்ள மாணவன்.

பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவனை உச்சி வெயிலில் முட்டி போட வைத்த ஆசிரியர்

Published On 2023-03-14 10:31 IST   |   Update On 2023-03-14 12:04:00 IST
  • தேர்வுகள் தொடங்கியுள்ள நிலையில் மாணவர்களை அதற்காக தயார்படுத்தும் முயற்சியில் கடுமையாக ஆசிரியர்கள் தண்டிப்பதால் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.
  • பிரம்பால் அடிப்பது கூட குற்றம் என்று வாதிடப்படும் இந்த காலகட்டத்தில் வெயிலில் முட்டி போட வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நத்தம்:

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறையில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்புவரை சுமார் 1600-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு காலையில் நடந்தது. இதனால் மற்ற வகுப்பு மாணவர்கள் மதியம் பள்ளிக்கு வர அறிவுறுத்தியிருந்தனர். அவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்தி சிறப்பு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் செந்துறை மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் அனைவரையும் செந்துறை அரசு தொடக்கப்பள்ளிக்கு வருமாறு ரகுநாத், முனிசாமி, ராஜேந்திரன் உள்ளிட்ட ஆசிரியர்கள் அறிவுறுத்தியிருந்தனர்.

ஆனால் 10-ம் வகுப்பு மாணவர்களில் ஒருவர் வகுப்புகளுக்கு சரிவர வராமலும், பள்ளிக்கு காலதாமதமாக வந்ததாகவும் தெரிகிறது. இதனால் ஆசிரியர் ரகுநாத் அந்த மாணவரை அழைத்து திட்டியுள்ளார். மேலும் பள்ளியில் மதியம் உச்சி வெயிலில் மைதானத்தில் முட்டி போட்டுக்கொண்டே படிக்க வைத்துள்ளார். இதனால் அந்த மாணவன் சூடுதாங்க முடியாமல் கண்ணீர்விட்டு அலறித் துடித்தான். இதை அங்குள்ள சிலர் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இது வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்வுகள் தொடங்கியுள்ள நிலையில் மாணவர்களை அதற்காக தயார்படுத்தும் முயற்சியில் கடுமையாக ஆசிரியர்கள் தண்டிப்பதால் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். பிரம்பால் அடிப்பது கூட குற்றம் என்று வாதிடப்படும் இந்த காலகட்டத்தில் வெயிலில் முட்டி போட வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News