உள்ளூர் செய்திகள்

செந்துறை அருகே நள்ளிரவில் டாஸ்மாக் கடை ஷட்டரை உடைத்து ரூ.2 லட்சத்து 23 ஆயிரம் கொள்ளை

Published On 2023-01-11 16:50 IST   |   Update On 2023-01-11 16:50:00 IST
  • டாஸ்மாக் கடையின் பக்கவாட்டில் உள்ள ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் திறந்து கிடந்தது.
  • வழியாக சென்றவர்கள் உடனடியாக டாஸ்மாக் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

செந்துறை:

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இரும்புலிகுறிச்சி கிராமத்தில் அரசு டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகின்றது. இரும்புலிக்குறிச்சி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான குடிமகன்கள் இங்கு வந்து மது அருந்தி செல்கிறார்கள்.

இந்நிலையில் நேற்று இரவு பணி முடிந்து கடையின் விற்பனையாளர் சுப்பிரமணியன், விற்பனை பணம் ரூ.2 லட்சத்து 23 ஆயிரத்தை அங்குள்ள லாக்கரில் வைத்து பூட்டி சாவியை அதன் அருகிலேயே வைத்து விட்டு சென்றுள்ளார்.

இன்று காலை டாஸ்மாக் கடையின் பக்கவாட்டில் உள்ள ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் திறந்து கிடந்தது. இதனைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக டாஸ்மாக் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் விற்பனையாளர் சுப்ரமணியன் கடைக்கு வந்து பார்த்தபோது நேற்று விற்பனையாகி லாக்கரில் வைத்திருந்த ரூ.2 லட்சத்து 23 ஆயிரம் பணம் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது. மேலும் மது பாட்டில்களும் திருடப்பட்டு இருந்தன.

நள்ளிரவில் கடைக்கு வந்த கொள்ளையர்கள் தாங்கள் சிக்காமல் இருப்பதற்காக அங்கு பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராவை துணியை வைத்து மூடி வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து இரும்புலிக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த கொள்ளை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Similar News