சூப்பர்மார்க்கெட் கடையில் கூட்ட நெரிசலில் பிளாஸ்டிக் பையால் கையை மறைத்து செல்போன் திருடும் வாலிபர்
- காஞ்சிபுரம் பகுதியில் திருட்டு, வழிப்பறி சம்பவங்களை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் பகுதியில் திருட்டு, வழிப்பறி சம்பவங்களை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். எனினும் கொள்ளையர்களும் தங்களது கைவரிசை பாணியை மாற்றி போலீசாருக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி வருகின்றனர்.
கூட்ட நெரிசலின் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் அதனையே கொள்ளையர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி நகை, செல்போன் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர். காஞ்சிபுரத்தில் கூட்டம் அதிகமாக காணப்படும் சூப்பர் மார்க்கெட் கடையில் கொள்ளையர்கள் நூதன முறையில் செல்போன் திருடும் காட்சி பதிவாகி உள்ளது.
காஞ்சிபுரம் நகரில் செயல்படும் சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களுக்கான பணம் செலுத்த சின்ன காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் வரிசையில் நின்றார்.
அப்போது அருகில் வரும் மர்மவாலிபர் ஒருவர் ரமேசின் அருகில் வந்து நிற்கிறார். பின்னர் காலியான சிறிய பிளாஸ்டிக் பையை கையை மறைக்கும் வகையில் வைத்து நூதன முறையில் ரமேசின் சட்டைபையில் இருந்து செல்போன் மற்றும் ரூ.2500 ரொக்கம் ஆகியவற்றை திருடி தப்பி சென்றுவிட்டார்.
இந்த காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது. அந்த கொள்ளையனுக்கு கூட்டாளியாக வேறு ஒருவரும் வந்து உள்ளார். அவர் கடையில் நிற்கும் வாடிக்கையாளர்களில் யாரிடம் திருடுவது என்பதை நோட்டமிட்டு தெரிவிக்கிறார்.
இந்த வீடியோகாட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கண்காணிப்பு கேமிரா காட்சியை ஆய்வு செய்து கொள்ளையர்கள்குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.