தேவகோட்டை கோவில் திருவிழாவில் இருதரப்பினர் இடையே திடீர் மோதல்
- தேவகோட்டை அருணகிரிபட்டினத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட முத்துமாரியம்மன் கோவில் உள்ளது.
- ஒரு தரப்பினர் நீதிமன்றத்தை நாடி தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு பெற்று உள்ளனர்.
தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருணகிரிபட்டினத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆடி திருவிழாவை முன்னிட்டு கடந்த செவ்வாய்க்கிழமை முத்துமாரி அம்மனுக்கு காப்பு கட்டி விழா தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வான கோவில் கரகம் எடுப்பு பாரம்பரிய முறைப்படி இரு சமூக மக்களிடையே தலா ஒரு சீட்டு அம்மன் சன்னதியில் குலுக்கி போட்டு யார் பெயர் வருகிறதோ, அந்த சமூக மக்கள் கரகம் எடுப்பது வழக்கம்.
ஒரு தரப்பினர் நீதிமன்றத்தை நாடி தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு பெற்று உள்ளனர். இந்த நிலையில் மற்றொரு தரப்பினர் நீதிமன்றத்தை நாடி மாற்று உத்தரவு பெற்று உள்ளதாகவும், நீதிமன்றம் வழங்கிய உத்தரவை வட்டாட்சியர் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
மேலும் நீதிமன்ற உத்தரவுப்படி கோவில் கரகம் எடுத்து திருவிழா நல்ல முறையில் நடக்கவும், தங்கள் குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்கவும் டவுன் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சரவணனிடம் மனு அளித்தனர். அதன் அடிப்படையில் நேற்று மாலை கோவில் வாசலில் வட்டாட்சியர், அறநிலை துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் இரு தரப்பு மக்களிடையே தற்போது உள்ள நீதிமன்ற உத்தரவுப்படி கோவில் கரகம் எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
ஆனால் தற்போது நீதிமன்ற ஆணை பெற்ற தரப்பினர், மற்றொரு தரப்பினர் கரகத்தை எடுக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதைதொடர்ந்து அங்கு அசம்பாவிதம் ஏற்படாத வகையில் துணை கண்காணிப்பாளர் கணேஷ் குமார் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு இரு தரப்பினரையும் வெளியேற்றினர். இதில் ஒரு தரப்பினர் கோவில் முன்பு அமர்ந்து இன்று பெற்றுள்ள உத்தரவுபடி அதிகாரிகள் திருவிழாவை நடத்த வேண்டும். அதுவரை ஒரு தரப்பினர் கரகம் எடுக்க அனுமதிக்க கூடாது என்று கூறினார்கள். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.