சோழவரம் அருகே இன்று ரவுடி வெட்டிக்கொலை
- ரவுடி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் செங்குன்றம் மற்றும் சோழவரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சோழவரம் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
செங்குன்றம்:
செங்குன்றம் அருகே உள்ள பாடியநல்லூர் நகரைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது24).
ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்தநிலையில் இன்று அதிகாலை ரமேஷ் சோழவரத்தை அடுத்த ஆட்டந்தாங்கல் பகுதியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் சோழவரம் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது ரமேசின் நண்பர்களே அவரை தீர்த்துக்கட்டி இருப்பது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தர விட்டார். இதையடுத்து செங்குன்றம் துணை கமிஷனர் மணிவண்ணன் மேற் பார்வையில் சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் தீவிர விசாரணையில் ஈடுபட்டார்.
இதனைதொடர்ந்து ரமேசை வெட்டிக் கொலை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் அவரது நண்பர்களான வீரராகவன், விஜய், வெங்கடேஷ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
வினோத், அரவிந்தன் ஆகிய 2 பேரும் தப்பி ஓடி விட்டனர். அவர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ரமேஷ் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் என்ன? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ரமேசுக்கும், அவரது நண்பரான அரவிந்தனுக்கும் இடையே சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டு உள்ளது.
அப்போது அரவிந்தனை ரமேஷ் அவதூறாக பேசியதாக தெரிகிறது. இது தொடர்பாக ஏற்பட்ட விரோதம் காரணமாக ரமேஷ் கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரவுடி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் செங்குன்றம் மற்றும் சோழவரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.