அம்பத்தூர் பானு நகரில் 3 மளிகை கடை-செல்போன் கடைகளில் தொடர் திருட்டு
- கொள்ளையர்களில் ஒருவன் ஹெல்மெட் அணிந்துள்ளது கேமிராவில் பதிவாகி உள்ளது.
- பானுநகரில் நடைபெறும் தொடர் கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அம்பத்தூர் பானுநகரில் போலீஸ் ரோந்து சரிவர இல்லாததால் திருட்டு சம்பவங்கள் மீண்டும் அரங்கேறி வருகிறது. நேற்றிரவு கடப்பாரையுடன் வந்த 2 கொள்ளையர்கள் 4 கடைகளின் பூட்டை உடைத்துள்ளனர்.
பானுநகர் முதல் மெயின் ரோட்டில் சரண்யா ஸ்டோர் என்ற மளிகை கடை நடத்தி வருபவர் காளிராஜன்.இவரது கடையின் பூட்டை உடைத்த கொள்ளையர்கள் அங்கிருந்த மளிகை பொருட்கள் மட்டுமின்றி கடையில் இருந்த பணத்தையும் எடுத்து சென்று விட்டனர்.
இதேபோல் பானுநகர் 8-வது அவென்யூ, 10-வது அவென்யூ பகுதியில் உள்ள மளிகை கடைகளின் பூட்டையும் கொள்ளையர்கள் கடப்பாரையால் உடைத்துள்ளனர்.
10-வது அவென்யூ மளிகை கடையில் ஒரு பூட்டை மட்டும் கொள்ளையர்கள் உடைத்துள்ளனர். இன்னொரு பூட்டை உடைக்க முடியவில்லை.
இதேபோல் பானுநகர் முதல் மெயின் ரோட்டில் உள்ள செல்போன் கடைக்கு சென்ற கொள்ளையர்கள் அங்கிருந்த சி.சி.டி.வி. கேமிராவை உடைத்து விட்டு கடையின் பூட்டை உடைத்து உள்ளனர். கொள்ளையர்களில் ஒருவன் ஹெல்மெட் அணிந்துள்ளது கேமிராவில் பதிவாகி உள்ளது.
பானுநகரில் நடைபெறும் தொடர் கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.