உள்ளூர் செய்திகள்

அபூர்வ நோயால் இரண்டு கால்களும் பாதிப்பு- உயர் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் உயிருக்கு போராடும் சீர்காழி மாணவி

Published On 2022-12-21 04:53 GMT   |   Update On 2022-12-21 04:53 GMT
  • அபிநயாவுக்கு காலில் எஸ்.இ.எல். என்ற அபூர்வ வகை நோய் ஏற்பட்டு இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டது.
  • அபிநயா சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பனங்காட்டு தெரு அம்மன்நகரை சேர்ந்தவர் முத்தழகன். அவரது மனைவி கனிமொழி. இவர்களுக்கு ஆதித்யா (வயது 17) என்ற மகனும், அபிநயா (வயது 13) என்ற மகளும் உள்ளனர். ஆதித்யா 12-ம், அபிநயா சீர்காழியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பும் படித்து வருகிறார்.

முத்தழகன் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னாள் இறந்து விட்டார். இதனால் கனிமொழி வயல்வேலைக்கு சென்று குழந்தைளை காப்பாற்றி வந்தார்.

இந்த சூழ்நிலையில் அபிநயாவுக்கு காலில் எஸ்.இ.எல். என்ற அபூர்வ வகை நோய் ஏற்பட்டு இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் நோய் குணமாகாத நிலையில் அபிநயாவின் இரண்டு கால்களையும் அகற்ற வேண்டுமென மருத்துவர்கள் தெரிவித்ததாக தெரிகிறது.

இதனால் பதறிபோன அவரது குடும்பத்தினர் மேல் சிகிச்சைக்காக நேற்று மாலை சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஏழை குடும்பத்தைச் சேர்ந்த மாணவி அபிநயா மருத்துவ செலவு செய்ய முடியாமல் தற்போது உயிருக்கு போராடி வருகிறார். இந்நிலையில் தன்னை காப்பாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை விடுக்கும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

மேலும் அவரது தாய் கனிமொழி கூறுகையில், கூலி வேலை செய்து எனது மகன், மகளை காப்பாற்றி வந்துள்ளேன். தற்போது அபிநயாவுக்கு மருத்துவ செலவு அதிகம் ஆகிறது. இது தொடர்பாக முதல்-அமைச்சரை சந்தித்து மனு கொடுக்க உள்ளேன் என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News