உள்ளூர் செய்திகள்

தாராபுரத்தில் பள்ளி மாணவன் தற்கொலை முயற்சி- கைதான ஆசிரியர் நெஞ்சுவலியால் ஆஸ்பத்திரியில் அனுமதி

Published On 2022-07-21 06:34 GMT   |   Update On 2022-07-21 06:34 GMT
  • ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும்படி குழந்தைகள் நல அலுவலர் தாராபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
  • புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி ஆசிரியர் பிரகாசம் ஜெயக்குமார் மீது வழக்கு பதிவு செய்தனர்.

தாராபுரம்:

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் போலீஸ் நிலையம் அருகே தனியார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவர் ஒருவர் தேர்வை சரியாக எழுதவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து சமூக அறிவியல் ஆசிரியர் பிரகாசம் ஜெயக்குமார் (வயது 50) என்பவர் வகுப்பறையில் வைத்து சக மாணவர்கள் முன்னிலையில் அந்த மாணவரை திட்டியதாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக அந்த மாணவர் பள்ளி விடுதியில் வைத்து பிளேடால் தனது இடதுகையில் அறுத்துக் கொண்டார்.

இதையடுத்து மற்ற மாணவர்கள் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இது சம்பந்தமாக மாணவரின் பெற்றோர் திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் புகார் அளித்தனர். அதன் பேரில் அதிகாரிகள் பள்ளியில் விசாரணை நடத்தினர். இதில் ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்த மாணவர் கையை அறுத்துக் கொண்டது உண்மை என தெரியவந்தது.

மேலும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும்படி குழந்தைகள் நல அலுவலர் தாராபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி ஆசிரியர் பிரகாசம் ஜெயக்குமார் மீது வழக்கு பதிவு செய்தனர். பிறகு அவரை கைது செய்த போது நெஞ்சுவலியால் திடீரென அவர் மயங்கினார். உடனே அவரை போலீசார் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆசிரியர் திட்டியதால் மாணவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தாராபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News