சேலம் அருகே ஆட்டை அடித்து கொன்று மலையில் பதுங்கிய சிறுத்தை டிரோன் மூலம் கண்காணிப்பு
- ஒரு பெரிய ஆட்டை சிறுத்தை கடித்து கொன்று இழுத்து சென்றது.
- ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு விட வேண்டாம் என வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் கடையாம்பட்டி அருகே பூசாரிப்பட்டி ஊராட்சியில் வைரன்காடு கிராமத்தையொட்டி தேங்கல்கரடு மலை பகுதி உள்ளது.
இந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் விவசாயத்துடன் ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றனர். இவர்கள் வளர்க்கும் ஆடுகளை அங்குள்ள கரட்டில் மேய்ச்சலுக்கு விட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக எலத்தூர், குண்டுக்கல் உள்ளிட்ட வனப்பகுதி மற்றும் கரட்டு பகுதியில் சிறுத்தை ஒன்று நடமாடி வந்துள்ளது. இதை பார்த்த கிராம மக்கள் வனத்துறையிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து வனத்துறை சார்பில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைத்து கண்காணித்து வருகின்றனர். ஆனால் ஒவ்வொரு பகுதியாக சுற்றிய சிறுத்தை வைரன்காடு பகுதியில் உள்ள தேங்கல்கரடு மலை பகுதியில் பதுங்கியது.
அப்போது விவசாயி கோவிந்தராஜ் என்பவரது 5 ஆடுகளை மேய்ச்சலுக்கு கரட்டு பகுதியில் விட்டிருந்தார். இதில் ஒரு பெரிய ஆட்டை சிறுத்தை கடித்து கொன்று இழுத்து சென்றது.
இதைக் கண்ட மற்ற 4 ஆடுகள் அங்குள்ள செங்குத்தான பாறை மீது ஏறி தப்பித்துள்ளன. அந்த பாறையின் அடியில் அடித்த ஆட்டை சாப்பிட்டுக் கொண்டு சிறுத்தை பதுங்கி இருந்தது. இதனால் பாறை மீது ஏறிய ஆடுகள் கீழே இறங்க முடியாமல் அங்கேயே தஞ்சமடைந்துள்ளன.
இதனிடைேய தனது ஆடுகளை மீட்க சென்ற கோவிந்தராஜை கண்ட சிறுத்தை விரட்டியுள்ளது. இதனால் பயந்துபோன அவர் அங்கிருந்து தப்பி ஓடி வந்தபோது கீழே விழுந்ததில் காயமடைந்தார். இதை பார்த்த கிராம மக்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் அங்கு முகாமிட்டு மலையில் பதுங்கிய சிறுத்தையை தேடி வருகின்றனர். ஏற்கனவே கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ள நிலையில் டிரோன் மூலம் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சிறுத்தை மலை பகுதியில் பதுங்கி உள்ளதால் பொது மக்கள் யாரும் கரட்டு பகுதிக்கு செல்ல வேண்டாம். மேலும் அங்கு ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு விட வேண்டாம் என வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இது பற்றி அப்பகுதி பெண்கள் கூறுகையில், சிறுத்தை கரட்டில் உலாவுவதை நாங்கள் பார்த்தோம். கோவிந்தராஜை விரட்டியதை பார்த்து அச்சத்தில் உள்ளோம். சிறுத்தைக்கு தேவையான உணவு இந்த பகுதியில் கிடைப்பதால் இங்கேயே உலாவுகிறது. இதனால் சிறுத்தையை விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.