உள்ளூர் செய்திகள்

திருமணிமுத்தாற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி

Published On 2023-09-20 14:03 IST   |   Update On 2023-09-20 14:03:00 IST
  • மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்:

சேலம் மாநகர பகுதியில் பல்வேறு இடங்களில் ஆதரவற்ற முதியோர் மற்றும் வீட்டை விட்டு வெளியேறி வந்த பலர் சாலை ஓரங்களிலும் பஸ் நிலையம், ரெயில் நிலையம் போன்ற இடங்களிலும் தங்கி உள்ளனர்.

இவர்கள் அன்றாட உணவு தேவைக்காக யாசகம் பெறுவதும், கோவில்களில் சென்று அன்னதானம் பெற்று உண்டும் வாழ்ந்து வருகின்றனர்.

இதில் பிரேமா (வயது 70) என்ற மூதாட்டி ஆதரவற்ற நிலையில் உடையாப்பட்டி பகுதியிலும், அம்மாப்பேட்டையில் உள்ள மிலிட்டரி ரோடு பகுதியிலும் கடந்த சில நாட்கள் தங்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர் திருமணிமுத்தாறு ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள காய்கறி மார்க்கெட் பகுதியிலும் சுற்றி திரிந்து வந்தார்.

இந்த நிலையில் வாழ வழியின்றி எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்து வந்த பிரேமா தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து, இன்று காலையில் பழைய பஸ் நிலையம் அருகே திருமணிமுத்தாறு ஆட்கொல்லி பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

ஆனால் திருமணிமுத்தாற்றில் முழங்கால் அளவே தண்ணீர் ஓடுவதால் பக்கவாட்டு சுவற்றில் உருண்டு கீழே விழுந்து காயம் அடைந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்த டவுன் போலீசார் மற்றும் செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு துறையினர் ஆற்றுக்குள் இறங்கி மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு மூதாட்டிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News