உள்ளூர் செய்திகள்

ரூ.5000 லஞ்சம் வாங்கிய வழக்கு: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு 3 ஆண்டு ஜெயில்

Published On 2022-11-10 10:41 GMT   |   Update On 2022-11-10 10:41 GMT
  • வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க இன்ஸ்பெக்டர் முருகேசன் செல்லையாவிடம் ரூ.5,000 லஞ்சமாக பெற்றார்.
  • போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு லஞ்ச வழக்கில் மூன்றாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் போலீசார் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி:

திருச்சி ஏர்போர்ட் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் முருகேசன். தற்போது இவர் திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

இதற்கிடையே கடந்த 2009-ல் ஏர்போர்ட் காவல் நிலையத்தில் முருகேசன் இன்ஸ்பெக்டராக இருந்தபோது அந்தப் பகுதியைச் சேர்ந்த ரம்யா என்ற பெண் தான் வேலை செய்த அரிசி ஆலை உரிமையாளர் செல்லையா என்பவர் தன்னை தாக்கியதாக புகார் அளித்தார்.

அதைத்தொடர்ந்து வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க இன்ஸ்பெக்டர் முருகேசன் செல்லையாவிடம் ரூ.5,000 லஞ்சமாக பெற்றார். அப்போது திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் முருகேசனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் இன்று நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பு கூறினார். ஊழல் தடுப்புச் சட்டம் 1988 பிரிவு 7-ன் கீழ் ஓராண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதமும், பிரிவு 13 டி பிரிவின் கீழ் 3 ஆண்டு கடுங்காவல் மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் பரபரப்பு தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில் அரசு வக்கீல் சுரேஷ்குமார் ஆஜராகினார். போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு லஞ்ச வழக்கில் மூன்றாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் போலீசார் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News