உள்ளூர் செய்திகள்

ஒரு வாரத்தில் விதிகளை மீறிய ஆட்டோக்கள், வாகனங்களுக்கு ரூ.3 லட்சம் அபராதம்

Published On 2022-10-01 06:40 GMT   |   Update On 2022-10-01 06:40 GMT
  • கடந்த ஒரு வாரத்தில் ஆட்டோக்கள், விதிமுறைகளை மீறிய கனரக வாகனங்கள் என அனைத்தையும் ஆய்வு செய்து அதற்கு அபராதம் விதிக்கப்பட்டதில் சுமார் ரூபாய் 3 லட்சம் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது.
  • ஆட்டோ டிரைவர்கள் வரவழைக்கப்பட்டு அதற்கு உரிய அபராதத்தை செலுத்த அறிவுறுத்திய பிறகு ஆட்டோ டிரைவர்கள் அபராதம் செலுத்தினர்.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு மிக முக்கிய காரணமாக ஆட்டோக்கள் செயல்படுகிறது என பொதுமக்கள் குற்றம்சாட்டினார்கள். இதையடுத்து கலெக்டர் ஆர்த்தி அறிவுரையின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் கடந்த ஒரு வாரமாக பல்வேறு இடங்களில் ஆட்டோக்களின் உரிமம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதில் 60-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் உரிமம் தகுதி சான்று, இன்சூரன்ஸ் உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்றாதது தெரியவந்தது. அந்த ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டன.

பின்னர் ஆட்டோ டிரைவர்கள் வரவழைக்கப்பட்டு அதற்கு உரிய அபராதத்தை செலுத்த அறிவுறுத்திய பிறகு ஆட்டோ டிரைவர்கள் அபராதம் செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து இன்று மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம், அபராதம் செலுத்திய ஆட்டோ டிரைவர்களுக்கு அரசு விதிகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும், மறுமுறை வாகனம் பிடிபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், நெரிசலான பகுதி என்பதால் சாலையோரம் வாகனத்தை நிறுத்தி பயணிகளை ஏற்ற வேண்டும், பயணிகளிடம் கனிவாக நடந்து கொண்டு மாவட்டத்திற்கு நற்பெயரை கொண்டு வர வேண்டும் என அறிவுரை வழங்கி 24 ஆட்டோ டிரைவர்களின் ஆட்டோக்களை அவர்களிடம் ஒப்படைத்தார். கடந்த ஒரு வாரத்தில் ஆட்டோக்கள், விதிமுறைகளை மீறிய கனரக வாகனங்கள் என அனைத்தையும் ஆய்வு செய்து அதற்கு அபராதம் விதிக்கப்பட்டதில் சுமார் ரூபாய் 3 லட்சம் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது.

Tags:    

Similar News