உள்ளூர் செய்திகள்

முதுகுளத்தூர் அருகே விவசாயி வீட்டில் ரூ.2 லட்சம்- 12 பவுன் நகைகள் கொள்ளை

Published On 2022-06-22 05:17 GMT   |   Update On 2022-06-22 05:17 GMT
  • பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சத்து 95 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் 12 பவுன் தங்க நகைகள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன.
  • சக்திவேல் வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள், அவரது வீட்டிற்குள் பட்டப்பகலில் புகுந்து நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள ஏ.நாகனேந்தல் பகுதியை சேர்ந்த விவசாயி சக்திவேல் (வயது 58). இவருக்கு மீனாட்சி என்ற மனைவியும், 2 மகள்கள் மற்றும் 1 மகனும் உள்ளனர்.

மகன் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். மகள்கள் இருவரும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இதனால் சக்திவேல் தனது மனைவியுடன் ஏ.நாகனேந்தலில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் முதுகுளத்தூர் அருகே உள்ள புழுதிக்குளம் உறவினர் ஒருவரது துக்க நிகழ்வில் பங்கேற்பதற்காக, சக்திவேல் நேற்று காலை தனது வீட்டை பூட்டி விட்டு மனைவியை அழைத்து கொண்டு சென்றார். பின்னர் மாலையில் இருவரும் வீட்டிற்கு திரும்பி வந்தனர்.

அப்போது அவர்களது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சக்திவேல் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, அறைகளில் இருந்த பீரோக்கள் திறந்து கிடந்தன. அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன.

பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சத்து 95 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் 12 பவுன் தங்க நகைகள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன. சக்திவேல் வீட்டில் ஆள் இல்லாதததை நோட்டமிட்ட மர்மநபர்கள், அவரது வீட்டிற்குள் பட்டப்பகலில் புகுந்து நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து கீழத்தூவல் போலீஸ் நிலையத்தில் சக்திவேல் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் சக்திவேல் வீட்டின் கதவு, பீரோக்களில் பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.

கொள்ளைப்போன நகைகள் மற்றும் பணத்தின் மொத்த மதிப்பு ரூ.5 லட்சம் என்று கூறப்படுகிறது. இந்த கொள்ளை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பூட்டியிருந்த வீட்டில் பட்டப்பகலில் புகுந்து நகைகள் மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்த சம்பவம் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News