உள்ளூர் செய்திகள்

நாமக்கல் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி வீட்டில் கணக்கில் வராத ரூ.13.35 லட்சம் சிக்கியது

Published On 2022-10-16 08:23 GMT   |   Update On 2022-10-16 08:23 GMT
  • நாமக்கல் நடராஜபுரத்தில் உள்ள கோட்ட பொறியாளர் சந்திரசேகரன் வீடு, நாமக்கல் மற்றும் சேலத்தில் உள்ள உதவி கோட்ட பொறியாளர் மாணிக்கம் வீடு ஆகியவற்றில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
  • கோட்ட பொறியாளர் சந்திரசேகரன் வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.4 லட்சத்து 36 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

நாமக்கல்:

நாமக்கல்-மோகனூர் சாலையில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் மற்றும் உதவி கோட்ட பொறியாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இங்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒப்பந்ததாரர்களிடம் பணம் மற்றும் பரிசு பொருட்கள் லஞ்சமாக பெறப்படுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து நேற்று முன்தினம் நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ராமசந்திரன் தலைமையிலான போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையின்போது கணக்கில் வராத ரூ.8 லட்சத்து 99 ஆயிரத்து 900 பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக கோட்ட பொறியாளர் சந்திரசேகரன், உதவி கோட்ட பொறியாளர் மாணிக்கம் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கிடையே 2-ம் நாளான நேற்று, நாமக்கல் நடராஜபுரத்தில் உள்ள கோட்ட பொறியாளர் சந்திரசேகரன் வீடு, நாமக்கல் மற்றும் சேலத்தில் உள்ள உதவி கோட்ட பொறியாளர் மாணிக்கம் வீடு ஆகியவற்றில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

இதில் கோட்ட பொறியாளர் சந்திரசேகரன் வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.4 லட்சத்து 36 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தமாக 2 நாட்களாக நடந்த இந்த சோதனையில் ரூ.13 லட்சத்து 35 ஆயிரத்து 900 பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News