உள்ளூர் செய்திகள்

போச்சம்பள்ளி வாரசந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை: வியாபாரிகள் மகிழ்ச்சி

Published On 2024-01-14 13:36 IST   |   Update On 2024-01-14 13:36:00 IST
  • திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் ஆர்வத்துடன் ஆடுகளை வாங்கி சென்றனர்.
  • ரூ.1 கோடி வரை ஆடுகள் வியாபாரம் நடந்ததால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மத்தூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வாரச்சந்தை ஞாயிற்றுக்கிழமை தோறும் கூடுவது வழக்கம். இச்சந்தையில் குண்டூசி முதல் தங்கம் வரை அனைத்தும் விற்கப்படுவதால், சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் வாரசந்தைக்கு வந்து ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வது வழக்கம்.

இந்நிலையில் நாளை பொங்கல் பண்டிகையையொட்டி போச்சம்பள்ளி வாரசந்தையில் இன்று பொங்கல் பண்டிகை கொண்டாட தேவையான பானை, கரும்பு, வாழை மரம், மாடுகளுக்கான கயிறுகள், மஞ்சள் குழை, வாழைபழம், தேங்காய் மற்றும் பூஜை பொருட்களும், மாடுகள் மீது பூச கூடிய வண்ண பொடிகள், கோலப்பொடிகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும், காய்கறிகளும் விற்பனை படுஜோராக நடைபெற்றது.

வாரசந்தையில் பொங்கல் விற்பனைக்காக சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏரளமான வியாபாரிகள் பொருட்களுக்கு விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

இதனை வாங்க ஊத்தங்கரை, மத்தூர், திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், தருமபுரி மாவட்டத்தில் இருந்து இருமத்தூர், கம்பை நல்லூர் ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பொதுமக்கள் குவிந்தனர். இதனால் போச்சம்பள்ளி வாரசந்தையில் பொங்கல் பண்டிகை விற்பனை களை கட்டியது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

இதேபோன்று ஆடுகள் விற்பனையும் ஜோராக நடைபெற்றது.

இதில் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் ஆர்வத்துடன் ஆடுகளை வாங்கி சென்றனர். இதன் காரணமாக ரூ.1 கோடி வரை ஆடுகள் வியாபாரம் நடந்ததால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கிராமங்களில் பண்டிகைகளை எதிர்பார்த்து விவசாயிகள் ஆடுகளை வளர்த்து வருகின்றனர். பண்டிகை காலங்களில் விற்பனை செய்யும்போது சராசரி விலையை விட சற்று கூடுதல் விலை விற்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி கொண்டனர்.

Tags:    

Similar News