பொன்னேரி அருகே மனைவியிடம் நகை பறித்ததை தடுத்த கணவருக்கு அரிவாள் வெட்டு
- சேகர் மோட்டார் சைக்கிளை நிறுத்தியதும் மர்மநபர்கள் கத்தியை காட்டி மிரட்டி அமுதா அணிந்து இருந்து நகையை பறிக்க முயன்றனர்.
- சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்ததும் வழிப்பறி கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
பொன்னேரி:
பொன்னேரியை அடுத்த பெரும்பேடு லிங்கப்பயன் பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி அமுதா. கணவன்-மனைவி இருவரும் இரவு பொன்னேரியில் இருந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
பொன்னேரி அடுத்த பெரும்பேடு மத்ராவேடு பஸ் நிறுத்தம் அருகில் சென்றபோது 3 மர்மநபர்கள் திடீரென மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர்.
சேகர் மோட்டார் சைக்கிளை நிறுத்தியதும் மர்மநபர்கள் கத்தியை காட்டி மிரட்டி அமுதா அணிந்து இருந்து நகையை பறிக்க முயன்றனர். இதனை சேகர் தடுக்க முயன்றார்.
இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் சேகரை அரிவாளால் வெட்டினர். இதில் அவரது காதில் வெட்டு விழுந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அமுதா அலறினார்.
சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்ததும் வழிப்பறி கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அரிவாள் வெட்டில் பலத்த காயம் அடைந்த சேகரை மீட்டு மேல் சிகிச்கைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து பொன்னேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரிய காவனம் பகுதியை சேர்ந்த ஜெயசாரதி என்பவரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகிறார்கள்.