மூதாட்டி முத்தம்மாளிடம் மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி கனிவுடன் பேசிய காட்சி.
மூதாட்டியிடம் ரூ.60 ஆயிரத்தை பறித்து சாலையில் தவிக்க விட்ட உறவினர்கள்: அரவணைப்புடன் பேசி உதவி செய்த கமிஷனர்
- சாலையில் கேட்பாரற்ற நிலையில் தவித்து வந்த பார்வை திறன் குறைபாடு உடைய மூதாட்டியை அரவணைப்புடன் பேசி முதியோர் காப்பகத்தில் சேர்க்க உதவிய கமிஷனரின் செயல் அனைவரிடமும் பாராட்டை பெற்றுள்ளது.
- மாநகராட்சி கமிஷனர் தனது அலுவலகத்தில் இருக்கையில் அமர வைத்து மூதாட்டியை கனிவுடன் நடத்திய வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
புளியங்குடி:
தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியை சேர்ந்தவர் முத்தம்மாள் (வயது 72). இவருக்கு கண் பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவருக்கு நெல்லையில் உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்வதாக கூறி அவரது உறவினர்கள் அவரிடம் இருந்து சுமார் 60 ஆயிரம் வரை பெற்றதாக தெரிகிறது.
பின்னர் முத்தம்மாளை நெல்லையில் உள்ள கண் மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர். ஆனால் அவரை மருத்துவமனையில் அனுமதிக்காமல் மருத்துவமனை அருகே உள்ள பஸ் நிறுத்த சாலையில் விட்டு சென்றனர்.
கண் தெரியாத நிலையில் மூதாட்டி செய்வதறியாமல் கூச்சலிட்டு கத்திக்கொண்டே இருந்தார். இதனை கண்ட சமூக ஆர்வலர்கள் நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணுவை தொடர்பு கொண்டு விபரத்தை கூறினர்.
இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் விஷ்ணு, மாநகராட்சி முதியோர் காப்பக நிர்வாகிகளுக்கு தகவல் அளித்ததன் பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மூதாட்டியை மீட்டு நடந்தது குறித்து விசாரித்தனர்.
அப்போது தனது சிகிக்சைக்காக உறவினர்களிடம் மூதாட்டி ஆயிரக்கணக்கில் பணம் இழந்து உள்ளதை அறிந்த நிர்வாகிகள், இது தொடர்பாக மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தியிடம் தெரிவித்தனர்.
உடனடியாக அவருக்கு கண் பார்வை சிகிச்சை அளிப்பதற்கு ஏற்பாடு செய்ய மாநகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தியதோடு, மருத்துவர்கள் தெரிவிக்கும் தகவலை தன்னிடம் உடனடியாக தெரிவிக்கவும் கூறினார்.
இதனை தொடர்ந்து கண் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் மூதாட்டிக்கு பார்வை திறன் குறைபாடு சரியாவதற்கு வாய்ப்பு 95 சதவீதம் இல்லை என தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து மருத்துவர்கள் அளித்த தகவலை மாநகராட்சி ஆணையாளரை நேரில் சந்தித்து தெரிவிப்பதற்காக மாநகராட்சி முதியோர் காப்பக நிர்வாகி சரவணன் தலைமையிலான குழுவினர் முத்தம்மாளை ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தியிடம் அழைத்து சென்றனர். அப்போது கனிவுடன் மூதாட்டியிடம் பேசிய கமிஷனர், உங்களுக்கு அனைத்து விதமான பாதுகாப்பு அளித்து கவனித்துக் கொள்வதற்கு ஏற்பாடுகளை செய்து தருவதாக தெரிவித்தார். மேலும் இழந்த பணத்தை காவல்துறை உதவியுடன் மீட்டு தருவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார். இதனை கேட்ட மூதாட்டி கண்கலங்கிய நிலையில் நன்றியினை தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ்சை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மூதாட்டிக்கு உரிய பராமரிப்பு அளிக்க வேண்டுகோள் விடுத்ததுடன், மாநகராட்சி முதியோர் காப்பக நிர்வாகிகள் உதவியுடன் புளியங்குடி காவல் நிலையத்திலும் சம்பவம் குறித்து புகார் அளிக்க கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி ஏற்பாடு செய்தார்.
சாலையில் கேட்பாரற்ற நிலையில் தவித்து வந்த பார்வை திறன் குறைபாடு உடைய மூதாட்டியை அரவணைப்புடன் பேசி முதியோர் காப்பகத்தில் சேர்க்க உதவிய கமிஷனரின் செயல் அனைவரிடமும் பாராட்டை பெற்றுள்ளது. மேலும் மாநகராட்சி கமிஷனர் தனது அலுவலகத்தில் இருக்கையில் அமர வைத்து மூதாட்டியை கனிவுடன் நடத்திய வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.