கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை
- கொடிவேரி, கவுந்தப்பாடி, பவானிசாகர், எலந்தகுட்டை மேடு ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது.
- மழை காரணமாக வெப்பம் தணிந்து இரவில் குளிர்ந்த காற்று வீசியது.
கோபி:
ஈரோடு மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக அனல் காற்று வீசி வருகிறது. இதனால் காலை 11 மணி முதல் மதியம் 4 மணி வரை பொதுமக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் இரவு நேரத்திலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டது. இதே போல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று அனல் காற்று வீசியது. ஒரு சில இடங்களில் வெயில் இல்லாமல் புழுக்கமாக காணப்பட்டது.
இந்த நிலையில் மாலை நேரத்தில் மாவட்டம் முழுவதும் திடீரென காற்று வீசியது. இதனால் மழை வருவது போல் மேககூட்டங்கள் திரண்டு இருந்தது.
கோபி செட்டிபாளையம் பகுதியில் இரவு 9 மணியளவில் சூறாவளி காற்று வீசியது. பின்னர் திடீரென பயங்கர மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. இரவு 9 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை தொடர்ந்து 9.50 மணி வரை இடைவிடாமல் கொட்டியது. இதே போல் கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளான நாயக்கன் கரடு, காட்டூர், நல்லகவுண்டன் பாளையம், மொடச்சூர் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது.
இதே போல் சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு 9.30 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை இரவு 10 மணி வரை பெய்தது. இதே போல் கொடிவேரி, கவுந்தப்பாடி, பவானிசாகர், எலந்தகுட்டை மேடு ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து இரவில் குளிர்ந்த காற்று வீசியது.
ஈரோட்டில் நேற்று பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு-
கோபிசெட்டிபாளையம்-32.20, சத்தியமங்கலம்-12, கவுந்தப்பாடி-11.6, எலந்தகுட்டைமேடு-1.80, கொடிவேரி அணை-35 என மொத்தம் மாவட்டம் முழுவதும் 100 மி.மீட்டர் மழை பெய்தது.