உள்ளூர் செய்திகள்

தாம்பரம் அருகே விபத்தில் வாலிபர் பலி- லாரிகள், கனரக வாகனங்களுக்கு தடை விதிக்க கோரி பொதுமக்கள் மறியல்

Published On 2023-02-25 14:49 IST   |   Update On 2023-02-25 14:49:00 IST
  • திருநீர்மலை மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக பின்னால் வந்த பொக்லைன் எந்திரம் கண்ணிமைக்கும் நேரத்தில் மணிகண்டனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
  • நிலை தடுமாறி கீழே விழுந்த மணிகண்டன் மீது பொக்லைன் எந்திரத்தின் டயர் ஏறியதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

தாம்பரம்:

சென்னை தாம்பரம் அடுத்த கன்னடபாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (25). இவர், அதே பகுதியில் கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு வேலை நிமித்தமாக மணிகண்டன் தனது மோட்டார் சைக்கிளில் தாம்பரத்தில் இருந்து திருநீர்மலை நோக்கி சென்றார்.

திருநீர்மலை மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக பின்னால் வந்த பொக்லைன் எந்திரம் கண்ணிமைக்கும் நேரத்தில் மணிகண்டனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த மணிகண்டன் மீது பொக்லைன் எந்திரத்தின் டயர் ஏறியதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுபோன்று பள்ளி குழந்தைகள், முதியவர்கள் அந்த சாலையில் பரபரப்பாக செல்லும் நேரத்தில் கனரக வாகனங்கள், லாரிகள் அந்த சாலையில் பயணிப்பதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழப்பும் ஏற்படுகிறது என அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டினார்கள்.

இந்தநிலையில் லாரிகள், கனரக வாகனங்கள் அந்த சாலையில் செல்ல தடை விதிக்க கோரி அப்பகுதி மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் பதாகைகள் ஏந்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மறியல் போராட்டம் நடத்தியவர்களுடன் போலீசார் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News