குண்டும், குழியுமாக உள்ள ஊரப்பாக்கம்-நல்லம்பாக்கம் சாலையை சீரமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
- சாலையை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் ஏற்கனவே சாலையில் நாற்று நடும் போராட்டம்.
- சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கூடுவாஞ்சேரி:
ஊரப்பாக்கம் அருகே உள்ளது நல்லம்பாக்கம். ஜி.எஸ்.டி. சாலையில் தொடங்கி வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் 14 கிலோ மீட்டர் தூரம்கொண்டது. இச்சாலை மாநில ஊரக நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இதில் காட்டூர் முதல் பெரிய அருங்கால் வரையில் 700 மீட்டரும், இதேபோல் சின்ன அருங்கால் முதல் கீரப்பாக்கத்தில் உள்ள தேசிய எல்லை பாதுகாப்பு படை அலுவலகம் வரை உள்ள 300 மீட்டர் சாலையும், நல்லம்பாக்கம் முதல் நல்லம்பாக்கம் கூட்டுரோடு வரை 2 கிலோ மீட்டர் சாலையும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு 12 அடி தார் சாலை அமைக்கப்பட்டது.
இந்தநிலையில் கீரப்பாக்கம், நல்லம்பாக்கம் மற்றும் ஊனமாஞ்சேரி ஆகிய பகுதிகளில் கல்குவாரி மற்றும் கிரஷர்களுக்கு சென்று வரும் கனரக வாகனங்களால் இந்த சாலை குண்டும், குழியுமாக காட்சி அளித்து வருகிறது. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
இந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் ஏற்கனவே சாலையில் நாற்று நடும் போராட்டம், அங்கப்பிரதட்சணப் போராட்டம், மண் சோறு சாப்பிடும் போராட்டம், சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளனர். ஆனால் இதுவரை சாலையை சீரமைக்கும் பணி நடைபெறவில்லை.
எனவே உடனடியாக சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஊரப்பாக்கம்-நல்லம்பாக்கம் சாலை குண்டும், குழியுமாக காட்சிஅளிக்கிறது. இதனால் அவ்வழியே அரசு பஸ்கள் மற்றும் மாநகர பஸ்கள் சரிவர இயக்கப்படுவது இல்லை. இந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும், பல்வேறு வகையான போராட்டங்கள் நடத்தியும் இதுவரை கண்டுகொள்ளவில்லை.
இதனால் பள்ளி மாணவர்கள், கர்ப்பிணி பெண்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், அன்றாட வேலைக்கு சென்று வருவோர் என அனைத்து தரப்பு பொதுமக்களும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சாலையை சீரமைக்க வனத்துறை சார்பில் அனுமதி வழங்க தயாராக உள்ளோம். ஆனால் அதற்கான கருத்துருக்களை தயாரித்து எங்களுக்கு அனுப்பி வைக்கும்படி நெடுஞ்சாலை துறையினரிடம் பலமுறை கூறிஉள்ளோம்.
ஆனால் அதற்கான கோப்புகளை இதுவரை நெடுஞ்சாலைத்துறையினர் எங்களுக்கு அனுப்பி வைக்கவில்லை என்றனர். இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் கேட்டபோது பதில் அளிக்க மறுத்துவிட்டனர்.