உள்ளூர் செய்திகள்

கோவையில் விசைத்தறி உரிமையாளர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்

Published On 2022-09-17 04:23 GMT   |   Update On 2022-09-17 04:23 GMT
  • கோவை, திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 2 லட்சம் விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டு வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
  • வேலை நிறுத்த போராட்டத்தால் வேலை பார்த்து வந்த பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை:

கோவை சோமனூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் விசைத்தறி தொழில் நடைபெற்று வருகிறது.

2 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி நிறுவனங்கள் இங்கு உள்ளன. விசைத்தறி உரிமையாளர்கள் பாவு நூலை பெற்று கூலிக்கு நெய்து கொடுத்து வருகின்றனர்.

இந்த தொழிலின் மூலம் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன்பெற்று வருகின்றனர். பல கட்ட போராட்டங்களை நடத்தி நெசவுக்கு தற்போது தான் விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு பெற்றனர்.

தற்போது தமிழக அரசு அனைத்து வகை பிரிவிற்கும் 30 சதவிகித மின்கட்டணத்தை உயர்த்தி அறிவித்துள்ளது. மேலும் ஆண்டுக்கு 6 சதவிகிதம் மின்கட்டணம் உயர்த்தப்படும் எனவும் அறிவித்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மின் கட்டண உயர்வை ரத்து செய்ய கோரியும் விசைத்தறி உரிமையாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று 2-வது நாளாக வேலை நிறுத்தம் தொடர்கிறது. இதன் காரணமாக சோமனூரில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் விசைத்தறி கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. அந்த பகுதியே வெறிச்சோடி காணப்பட்டது.

இதேபோல் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விசைத்தறி உரிமையாளர்களும் தங்களது விசைத்தறி கூடத்தை மூடி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். கோவை, திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 2 லட்சம் விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டு வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். வேலை நிறுத்த போராட்டத்தால் அதில் வேலை பார்த்து வந்த பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News