பூந்தமல்லியில் நடத்தையை பற்றி தவறாக பேசியதால் வாலிபர் அடித்துக் கொலை
- பலத்த காயமடைந்த முருகன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் நேற்று இரவு உயிரிழந்தார்.
- வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்த போலீசார் வடிவேலுவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
பூந்தமல்லி:
சென்னை போரூர் அடுத்த காரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் (45). அதே பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (30).
இவர்கள் இருவரும் போரூர், பூந்தமல்லி பகுதிகளில் குப்பைகளில் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள், காகிதம், அட்டை, இரும்பு போன்ற பொருட்களை சேகரித்து விற்று சாலை யோரம் தங்கி வாழ்ந்து வருகின்றனர்.
அதேபோல பூந்தமல்லியை சேர்ந்த ஜமுனா என்பவரின் மகன் கார்த்திக் இவரும் தாயுடன் சேர்ந்து குப்பையில் உள்ள பொருட்களை சேகரித்து விற்று வருகின்றார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு பூந்தமல்லி பைபாஸ் சாலையோரம் வடிவேல், முருகன், கார்த்திக் 3 பேரும் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது முருகன், கார்த்திக்கின் தாயாருடன் வடிவேலுக்கு தொடர்பு இருப்பதாக கூறியுள்ளார். இதனால் வடிவேலுக்கும் முருகனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது.
இதில் ஆத்திரம் அடைந்த முருகன் இரும்பு கம்பியால் வடிவேலு முகத்தில் தாக்கியுள்ளார். பதிலுக்கு வடிவேலு உருட்டு கட்டையால் முருகனின் தலையில் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த முருகன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் நேற்று இரவு உயிரிழந்தார்.
தகவல் அறிந்த பூந்தமல்லி போலீசார் வடிவேலை பிடித்து விசாரித்து வந்தனர். முருகன் உயிரிழந்ததை தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்த போலீசார் வடிவேலுவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.