கல்லூரியில் திருநங்கைக்கு அனுமதி மறுப்பு- கலெக்டர் நடவடிக்கையால் அரசு கல்லூரியில் இடம் கிடைத்தது
- திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் தென்னரசு.
- தமிழக அரசுக்கும் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீசுக்கும் நன்றியை தெரிவித்தார்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் தென்னரசு. கூலித்தொழிலாளி. இவரது மகன் லோகேஷ்.
இவர் 2018-2019-ம் கல்வியாண்டில் பொன்னேரி அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் பாடப் பிரிவில் சேர்ந்து படித்து வந்தார்.
3 செமஸ்டர்கள் முடித்த நிலையில் தனது 17 வயதில் லோகேஷ் திருநங்கையாக மாற்றம் அடைவது தெரிய வந்தது. அதனையடுத்து 18 வயதில் லோகேஷ் முழுமையாக திருநங்கையாக மாறியுள்ளான்.
இதனால் 2-ம் ஆண்டில் வகுப்பறைக்குள் செல்ல அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பொறியியல் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார்.
இந்நிலையில் 2020-21 மற்றும் 2021-22 கல்வியாண்டில் கொரோனா காரணமாக கல்லூரியில் படிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
அதனையடுத்து 2022- 2023-ம் கல்வியாண்டில் ஏதேனும் பட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்று எண்ணிய லோகேஷ் திருநங்கையாக மாறியதால் தனது பெயரை ஓவியா என பெயர் மாற்றம் செய்து பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநிலக் கல்லூரியில் சேருவதற்காக விண்ணப்பித்துள்ளார்.
ஆனால் திருநங்கைகளுக்கான இட ஒதுக்கீட்டில் கல்லூரியில் சேர 5 நாட்கள் அதிகமாக இருப்பதால் சேர்க்கைக்கு வயது இல்லை எனக் கூறி நிராகரித்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து கல்லூரியில் சேர்ந்து பட்டப்படிப்பு படித்தே ஆக வேண்டும் என்ற வைராக்கியத்தில் திருவள்ளூர் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீசை நேரில் சந்தித்து ஓவியா கோரிக்கை விடுத்தார்.
அதனையடுத்து கலெக்டர் பரிசீலனை செய்து தமிழக அரசின் உயர் கல்வித்துறையின் ஒப்புதலோடு, அந்த திருநங்கை ஓவியாவுக்கு கருணை அடிப்படையில் பட்டப் படிப்பு பயில்வதற்கு ஏதுவாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள உலகநாத நாராயணசாமி அரசினர் கல்லூரியில் பி.எஸ்.சி கணிதவியல் படிப்பதற்காக இடம் ஒதுக்கீடு செய்து அதற்கான ஆணையை வழங்கினார்.
இதனால் திருநங்கை ஓவியா தமிழக அரசுக்கும் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீசுக்கும் நன்றியை தெரிவித்தார்.