மதுரவாயல் சிக்னலில் மோட்டார் சைக்கிளில் நின்ற போது தறிகெட்டு ஓடிய டீசல் லாரி மோதி போலீஸ்காரர் பலி
- டேங்கர் லாரியின் பிரேக் திடீரென பழுதடைந்ததால் விபத்து ஏற்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
- கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
போரூர்:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை சேர்ந்தவர் ஜெய்னுல்லா புதின் (வயது28). போலீஸ்காரரான இவர் தாம்பரம் ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவில் வேலை பார்த்து வந்தார்.
ஜெய்னுல்லா, மோட்டார் சைக்கிளில் மதுரவாயல் போலீஸ் நிலையம் அருகில் உள்ள ரேசன் கடை சிக்னலில் நின்று கொண்டு இருந்தார்.
அப்போது பின்னால் வந்த டீசல் "டேங்கர் லாரி" ஒன்று திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி ஜெய்னுல்லாவின் மோட்டார் சைக்கிளை இடித்து தள்ளிக்கொண்டு சிக்னல் கம்பம் மீது மோதி நின்றது.
இதில் ஜெய்னுல்லாவுக்கு தலை மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அயனம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் போகும் வழியிலேயே ஜெய்னுல்லா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் டீசல் லாரி மோதியதில் சிக்னல் கம்பம் முறிந்து விழுந்தது. அதிர்ஷ்ட வசமாக சிக்னலில் நின்ற மற்ற வாகன ஓட்டிகள் உயிர்தப்பினர். விபத்தை கண்டு அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்
தகவல் அறிந்ததும் கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
விபத்து ஏற்படுத்திய டேங்கர் லாரி டிரைவரான அய்யப்பந்தாங்கல் பகுதியை சேர்ந்த கணேசன் (வயது62) என்பவரை கைது செய்தனர்.
டேங்கர் லாரியின் பிரேக் திடீரென பழுதடைந்ததால் விபத்து ஏற்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.