உள்ளூர் செய்திகள்

பொதிகை எக்ஸ்பிரசில் மது போதையில் தகராறு செய்த ஆயுதப்படை போலீஸ்காரர்

Published On 2023-11-11 06:23 GMT   |   Update On 2023-11-11 06:23 GMT
  • சுப்பையா பாண்டியன் ரெயிலில் தகராறு செய்தது குறித்து மதுரை ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
  • மதுரை ரெயில் நிலையத்தில் காத்திருந்த ரெயில்வே போலீசார் சுப்பையா பாண்டியனை ரெயிலில் இருந்து இறக்கி அழைத்து சென்று விசாரித்தனர்.

விருதுநகர்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்தவர் சுப்பையா பாண்டியன்(வயது 35). சென்னையில் ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் சென்னை செல்வதற்காக சங்கரன் கோவில் ரெயில் நிலையத்திற்கு தனது நண்பர் அருண்(34) என்பவருடன் வந்தார். அங்கு வந்த செங்கோட்டையில் இருந்து சென்னை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருவரும் ஏறினர். இவர்கள் மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது.

ரெயில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வந்தபோது பரிசோதகர் சுப்பையா பாண்டியனிடம் டிக்கெட் கேட்டுள்ளார். அப்போது அவர் தான் ஆயுதப்படை காவலர் என்பதற்கான விவரங்களை தெரிவித்துள்ளார். பின்னர் அருணிடம் பரிசோதகர் டிக்கெட் கேட்டுள்ளார். அப்போது அவரிடம் டிக்கெட் இல்லை. அவரிடம் பயணச்சீட்டு எடுக்குமாறு பரிசோதகர் கூறி உள்ளார். ஆனால் சுப்பையா பாண்டியன் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தார். இருவரும் மது போதையில் இருப்பதை உணர்ந்து கொண்ட பரிசோதகர் ரெயில்வே பாதுகாப்பு படையினரிடம் தெரிவித்தார். அவர்களும் வந்து சுப்பையா பாண்டியனிடம் சமாதானமாக பேசி அருணுக்கு டிக்கெட் வாங்குமாறு கூறி உள்ளனர்.

ஆனால் சுப்பையா பாண்டியன் அவர்களிடமும் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனிடையே ரெயில் விருதுநகர் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. அங்கிருந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் அருணை ரெயிலில் இருந்து இறக்கி அழைத்து சென்று விசாரித்தனர். சுப்பையா பாண்டியன் தொடர்ந்து பயணம் செய்தார். இதற்கிடையே சுப்பையா பாண்டியன் ரெயிலில் தகராறு செய்தது குறித்து மதுரை ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

மதுரை ரெயில் நிலையத்தில் காத்திருந்த ரெயில்வே போலீசார் சுப்பையா பாண்டியனை ரெயிலில் இருந்து இறக்கி அழைத்து சென்று விசாரித்தனர். மேலும் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவர் மது போதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அபராதம் விதித்தனர். அவரது நண்பர் அருண் மீதும் வழக்குப்பதியப்பட்டுள்ளது.

எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிகள் முன்னிலையில் போலீஸ்காரர், டிக்கெட் பரிசோதகர் மற்றும் ரெயில்வே போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News