உள்ளூர் செய்திகள்

கணவன் கண்முன்னே மனைவி காரில் கடத்தல்: முன்னாள் காதலனை பிடிக்க தனிப்படை அமைப்பு

Published On 2023-11-24 05:58 GMT   |   Update On 2023-11-24 05:58 GMT
  • வேணுகோபால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேரிகை போலீசில் திரிஷா புகார் செய்ததாக கூறப்படுகிறது.
  • சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்து, திரிஷாவை கடத்திச் சென்ற வேணுகோபால் உள்ளிட்டவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகே கொல்லப்பள்ளி என்ற கிராமத்தை சேர்ந்த நாராயணப்பா என்பவரது மகள் திரிஷா (19). இவர், ஓசூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

இதேபோல், பேரிகை அருகே அலசபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வேணுகோபால் (22), இவரும் அதே கல்லூரியில் எம்.பி.ஏ. படித்து வருகின்றனர்.

இவர்கள் இருவரும் பிளஸ்-2 படிக்கும் போதிலிருந்தே ஒருவரையொருவர் காதலித்து வந்ததாக தெரிகிறது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இதனால் திரிஷாவின் வீட்டில், இவர்களது காதலுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதனை தொடர்ந்து, வேணுகோபாலுடனான காதலை தான் முறித்துக் கொண்டதாகவும், அவர் தொடர்ந்து வற்புறுத்துவதால், வேணுகோபால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாதம், பேரிகை போலீசில் திரிஷா புகார் செய்ததாக கூறப்படுகிறது.

பின்னர் திரிஷாவுக்கும், பர்கூர் அருகே எலத்தகிரியை சேர்ந்த ரமேஷ் என்ற வாலிபருக்கும் திருமணம் நடந்தது.

இந்த நிலையில், நேற்று தேர்வு எழுதுவதற்காக திரிஷாவை அவரது கணவர் ரமேஷ் எலத்தகிரியிலிருந்து மோட்டார் சைக்கிளில் ஓசூர் அழைத்து வந்தார்.

பின்னர் தேர்வு முடிந்து மீண்டும் மாலையில் மனைவியை அழைத்துக் கொண்டு ஊருக்கு திரும்பும்போது, ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பேரண்டபள்ளி அருகே உள்ள ஒரு பெட்ரோல் நிலைய பகுதியில், ரமேஷ் ஓட்டி வந்த வண்டியை ஒரு கார் வழிமறித்தது. அந்த காரில் 3 பேருடன் வந்த திரிஷாவின் முன்னாள் காதலன் வேணுகோபால், திரிஷாவை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி, கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பிவிட்டார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரமேஷ், இது குறித்து ஓசூர் அட்கோ போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்து, திரிஷாவை கடத்திச் சென்ற வேணுகோபால் உள்ளிட்டவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும், அவர்களை பிடிக்க அட்கோ போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வினோத்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம், ஓசூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News