உள்ளூர் செய்திகள்

கோவையில் மன அழுத்தம் காரணமாக தாய்- மகன் தற்கொலை

Published On 2023-11-21 10:30 IST   |   Update On 2023-11-21 10:30:00 IST
  • மன அழுத்தம் காரணமாக தாய், மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை:

கோவை கோவில்மேடு அருகே உள்ள இடையர்பாளையம் பொன்னையா வீதியை சேர்ந்தவர் பால சுப்பிரமணியம். இவரது மனைவி லட்சுமி (வயது 73). இவர்களது மகன் கணேஷ்குமார் (45). திருமணம் ஆகவில்லை.

கணேஷ் குமார் 45 வயதாகியும் திருமணத்துக்கு பெண் கிடைக்காததாலும், சரியான வேலை கிடைக்காததாலும் இவர் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். மேலும் தூக்கம் வராமல் தவித்த கணேஷ்குமார் கடந்த சில நாட்களாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு வந்தார்.

அவரது தாய் லட்சுமிக்கும் வயது முதிர்வு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவரை கணேஷ்குமார் கவனித்து வந்தார். இதன்காரணமாக வாழ்க்கையில் விரக்தி அடைந்த தாய், மகன் இருவரும் தற்கொலை செய்வது என முடிவு செய்தனர். அதன்படி வீட்டில் இருந்த சாணிப்பவுடரை கரைத்து 2 பேரும் குடித்தனர். சிறிது நேரத்தில் 2 பேரும் வீட்டிற்குள் மயங்கிய நிலையில் கிடந்தனர்.

அப்போது கணேஷ்குமாரின் சகோதரி வித்யா என்பவர் அவரது தாயை செல்போன் மூலமாக தொடர்பு கொண்டார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் உடனடியாக வீட்டிற்கு விரைந்து சென்றார். வீட்டிற்குள் 2 பேரும் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் இதுகுறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக ஆம்புலன்சு ஊழியர்கள் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் மயங்கிய நிலையில் கிடந்த லட்சுமியை சோதனை செய்த போது அவர் ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த கணேஷ்குமாரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் கணேஷ்குமாரும் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கவுண்டம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மன அழுத்தம் காரணமாக தாய், மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News