உள்ளூர் செய்திகள்

"தீரன்" பட பாணியில் சம்பவம்: 135 பவுன் நகை-வெள்ளி, பணத்தை கொள்ளையடித்த வடமாநில கும்பல்

Published On 2022-10-07 06:13 GMT   |   Update On 2022-10-07 06:13 GMT
  • கொள்ளையர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் உத்தரவின் பேரில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
  • மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி, சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், ஏட்டுகள் அரபி, ரஞ்சித் மற்றும் போலீசார் கொள்ளை நடந்த வீட்டில் தடயங்கள், கைரேகைகள் சேகரித்தனர்.

மேலூர்:

தமிழகத்தில் நடக்கும் கொள்ளை, வழிப்பறி போன்ற சம்பவங்களில் சில வடமாநில கும்பல் ஈடுபட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென போலீசார் வலியுறுத்தி வருகின்றனர்.

கடைகள், தொழிற்சாலைகளில் வேலைக்கு சேரும் மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்களின் முழு விவரங்களை வைத்திருக்க வேண்டுமென போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் ஒரு வீட்டில் வடமாநில கும்பல் கைவரிசை காட்டியுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

மேலூரில் உள்ள குமார் நகரைச் சேர்ந்தவர் பிரபு சங்கர். என்ஜினீயரான இவர் குடும்பத்துடன் பெங்களூரில் தங்கியிருந்து பணியாற்றி வருகிறார். விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு பிரபு சங்கர் வருவது வழக்கம். இதன் காரணமாக பெரும்பாலான நாட்கள் அவரது வீடு பூட்டியே கிடக்கும்.

இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் சம்பவத்தன்று இரவு வீட்டின் ஜன்னலை உடைத்து பீரோவில் இருந்த 135 பவுன் நகை, 45 கிலோ வெள்ளி, ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர். பெரும்பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொள்ளை தொடர்பாக மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கொள்ளையர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் உத்தரவின் பேரில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி, சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், ஏட்டுகள் அரபி, ரஞ்சித் மற்றும் போலீசார் கொள்ளை நடந்த வீட்டில் தடயங்கள், கைரேகைகள் சேகரித்தனர். மேலும் கொள்ளை நடந்த நேரத்தில் அந்தப்பகுதியில் பதிவான செல்போன் எண்கள், சி.சி.டி.வி. கேமிரா பதிவுகள் உள்ளிட்டவற்றை வைத்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பிரபு சங்கர் வீட்டில் கைவரிசை காட்டியது வடமாநில கும்பல் என தெரியவந்தது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த இந்த கும்பலை பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்தனர். மத்திய பிரதேச மாநிலம் அங்குனா மாவட்டம் கஜிராசேக் விஸ்வாங்கர் என்ற இடத்தில் பதுங்கி இருந்த ஜெய் கிசோலங்கி (வயது 39), அவனது கூட்டாளி கைலாஷ் (50) ஆகிய 2 பேரை உள்ளூர் போலீஸ் உதவியுடன் தனிப்படை போலீசார் பிடித்தனர்.

கைது செய்யப்பட்ட 2 பேரும் மதுரைக்கு கொண்டு வரப்பட்டனர். அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில், இவர்களுடன் மேலும் 4 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இந்த கும்பல் தமிகழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கைவரிசை காட்டியுள்ளனர். தொடர்ந்து கைதான 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரை தேடி வருகின்றனர்.

"தீரன்" பட பாணியில் வடமாநில கொள்ளை கும்பல் மேலூரில் ஒரு வீட்டில் நகை-பணத்தை திருடியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News