உள்ளூர் செய்திகள்

கள்ளக்குறிச்சியில் மோதல்- அ.தி.மு.க. கவுன்சிலர் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு

Published On 2022-10-08 17:13 IST   |   Update On 2022-10-08 17:13:00 IST
  • தி.மு.க. கவுன்சிலர் ஞானவேல், கள்ளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார்.
  • புகாரில், தன்னை அ.தி.மு.க. கவுன்சிலர் பாபு, விஷ்ணு மற்றும் சிலர் தாக்கியதாக கூறியுள்ளார்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சியில் நேற்று மாலை நகர்மன்ற கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்ததும் அனைத்து கவுன்சிலர்களும் வெளியே வந்தனர்.

அப்போது 17-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ஞானவேல் வந்த போது 5-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் யுவராணி, அவரது கணவர் ராஜா, அ.தி.மு.க. நகர செயலாளரும், 15-வது வார்டு கவுன்சிலருமான பாபு ஆகியோர் அவரை வழிமறித்தனர்.

அப்போது ஞானவேலிடம், நீங்கள் எப்படி எங்களது குடும்பம் பற்றி ஆபாசமாக பேசி, சமூக வலைதளங்களில் வெளியிடலாம் என்று கூறி தட்டி கேட்டனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அது கைகலப்பாக மாறியது. இருதரப்பினரும் பயங்கரமாக ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர்.

இதனையறிந்த மற்ற கவுன்சிலர்கள் ஓடிவந்து தகராறை விலக்கினர். இது குறித்து கள்ளக்குறிச்சி போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அப்போது கள்ளக்குறிச்சி நகர அ.தி.மு.க. செயலாளர் பாபு, அவரது மகன் கவுதம், கவுன்சிலர் யுவராணி, அவரது கணவர் ராஜா ஆகியோரை போலீசார் விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

இதனையறிந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. பிரபு, முன்னாள் எம்.பி. காமராஜ், ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர்கள் அய்யப்பா, தேவேந்திரன், ராஜசேகர் ஆகியோர் போலீஸ் நிலையத்துக்கு சென்றனர்.

இது குறித்து போலீசாரிடம் நியாயம் கேட்டனர். இதனை தொடர்ந்து கவுன்சிலர்கள் பாபு, யுவராணி மற்றும் ராஜா ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். கவுதம் மட்டும் விசாரணைக்காக போலீஸ் நிலையத்தில் இருந்தார்.

இந்த சம்பவம் குறித்து தி.மு.க. கவுன்சிலர் ஞானவேல், கள்ளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதில், தன்னை அ.தி.மு.க. கவுன்சிலர் பாபு, விஷ்ணு மற்றும் சிலர் தாக்கியதாக கூறியுள்ளார்.

அதனடிப்படையில் அ.தி.மு.க. கவுன்சிலர் பாபு உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News