கண்மாயில் குளித்த பட்டியலின பெண்கள்- 4 பேரை தாக்கி துரத்திய 2 வாலிபர்கள் மீது வழக்கு
- குளத்தில் குளிக்கச் சென்ற பட்டியல் இனத்தை சேர்ந்த பெண்களை இழிவாக பேசி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- புகாரின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட இருவர் மீதும் காவல்துறையினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கூத்தங்குடி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதேவி (வயது 44). பட்டியல் இனத்தைச் சேர்ந்த இவர் அருகே உள்ள வைராண்டி கண்மாயில் வெளியூரில் இருந்து வந்திருந்த தனது உறவினர்கள் 3 பேருடன் குளிக்கச் சென்றுள்ளார்.
அப்போது அங்கே வந்த மற்றொரு சமூகத்தை சேர்ந்த அய்யப்பன், முத்துராமன் ஆகியோர் இந்த குளத்தில் நீங்களெல்லாம் குளிக்கக் கூடாது என கூறியுள்ளனர். அதற்கு ஸ்ரீதேவி உள்ளிட்ட பெண்கள் ஏன் என்று கேட்டுள்ளனர். அதற்கு அய்யப்பன், முத்துராமன் இருவரும் சேர்ந்து அவர்களின் சாதிப் பெயரை சொல்லி இழிவாக பேசியதுடன் கட்டையால் தாக்கியுள்ளனர்.
இதனால் கடுமையான அவமானம் அடைந்த அவர்கள் காயங்களுடன் அங்கிருந்து அழுதுகொண்டே புறப்பட்டு சென்றனர். பின்னர் ஸ்ரீதேவி உள்ளிட்டோர் நாகுடி போலீஸ் நிலையத்தில் தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து புகார் தெரிவித்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட இருவர் மீதும் காவல்துறையினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதே புதுக்கோட்டை மாவட்டத்தில் அன்னவாசல் அருகே இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பட்டியல் இனத்தை சேர்ந்தவர்களுக்கு இரட்டை குவளை முறை, கோவிலுக்குள் அனுமதிக்காதது மற்றும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மலம் கலந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது குளத்தில் குளிக்கச் சென்ற பட்டியல் இனத்தை சேர்ந்த பெண்களை இழிவாக பேசி தாக்கிய சம்பவம் மீண்டும் பேசும் பொருளாக மாறியுள்ளது.