உள்ளூர் செய்திகள்

மது குடிக்க பணம் கொடுக்க மறுத்ததால் பெயிண்டரை கொன்ற வாலிபர் கைது- பரபரப்பு வாக்குமூலம்

Published On 2023-08-14 07:49 GMT   |   Update On 2023-08-14 07:49 GMT
  • தலையில் படுகாயம் அடைந்த மாரிதுரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
  • பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெயிண்டரை கொலை செய்த வாலிபரை தேடி வந்தனர்.

கவுண்டம்பாளையம்:

ராஜபாளையத்தை சேர்ந்தவர் மாரிதுரை (வயது 45). பெயிண்டர். இவர் குடும்பத்தை பிரிந்து கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நம்பர் 4 வீரபாண்டி பிரிவில் வசித்து வருகிறார். இவருக்கு வீடு இல்லாததால் அந்த பகுதிகளில் உள்ள கடைகளின் முன்பு படுத்து தூங்கி வந்தார்.

குடிப்பழக்கத்துக்கு அடிமையான மாரிதுரை அவரது நண்பரான ஜெரோ மியா (27) என்பவருடன் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றார். போதை தலைக்கேறிய நிலையில் இருந்த இவர்கள் 2 பேரும் கோவை-மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு கடை முன்பு அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் மாரிதுரையிடம் மது குடிக்க பணம் கேட்டார். அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் மாரிதுரையை கீழே தள்ளி அங்கு கிடந்த கல்லால் அவரது தலையில் தாக்கினார். பின்னர் அங்கு இருந்து தப்பிச் சென்றார். இதில் தலையில் படுகாயம் அடைந்த மாரிதுரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இந்த தகவல் கிடைத்ததும் பெரிய நாயக்கன்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் கொலை செய்யப்பட்ட மாரிதுரையின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெயிண்டரை கொலை செய்த வாலிபரை தேடி வந்தனர். அப்போது போலீசார் அந்த பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு மேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் வாலிபர் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனை வைத்து மாரிதுரையை கல்லால் தாக்கி கொலை செய்த திருமலை நாயக்கன்பாளையத்தை சேர்ந்த சக்திவேல் (19) என்பவரை கைது செய்தனர்.

அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

சம்பவத்தன்று நான் வேலை முடித்து விட்டு அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றேன். போதை தலைக்கேறிய நிலையில் கோவை-மேட்டுப்பாளையம் ரோட்டில் நடந்து சென்றேன். அப்போது எனக்கு ஏற்கனவே அறிமுகமான மாரிதுரை அந்த பகுதியில் உள்ள கடை முன்பு படுத்து இருந்தார். அவரிடம் நான் மது குடிக்க பணம் கேட்டேன். அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டார். அப்போது எங்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நான் அவரை கீழே தள்ளி அங்கு கிடந்த கல்லால் அவரது தலையில் தாக்கினேன். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் பரிதாபமாக இறந்தார்.

பின்னர் நான் தலைமறைவாக இருந்தேன். போலீசார் விசாரணை நடத்தி என்னை கைது செய்து விட்டனர். இவ்வாறு அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறி உள்ளார். போலீசார் கைது செய்யப்பட்ட சக்திவேலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News