உள்ளூர் செய்திகள்

அரச்சலூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு கட்டப்பட்டு இருந்த ஆடு, மாடு, வளர்ப்பு நாய்கள்.

அரச்சலூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் விடிய, விடிய போராட்டம்

Published On 2023-06-10 04:00 GMT   |   Update On 2023-06-10 04:00 GMT
  • கால்நடைகளை கொண்டு செல்ல வசதியாக வழி ஏற்படுத்தி தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
  • இன்று காலை பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்று கால்நடைகளை அவிழ்த்து கொண்டு வீடுகளுக்கு சென்றனர்.

கொடுமுடி:

ஈரோடு மாவட்டம் அரச்சலூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் 5-வது வார்டுக்கு உட்பட்ட ஊதங்காட்டுபுதூர் என்ற பகுதியில் தார்சாலை அமைக்கும் பணி கடந்த 2 மாதத்துக்கு முன்பு தொடங்கியது.

இந்த பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் வசித்து வருகின்றனர். இவர்கள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகின்றனர்.

சாலை அமைக்கும் பணிக்காக இந்த பகுதியில் ஆங்காங்கே குழி தோண்டப்பட்டும், மண் குவியல் குவியலாக கொட்டப்பட்டு இருப்பதாலும் தங்கள் பகுதிக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர்.

இதையடுத்து கால்நடைகளை கொண்டு செல்ல வசதியாக வழி ஏற்படுத்தி தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் கோபம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது ஆடு, மாடு, வளர்ப்பு நாய்களுடன் அரச்சலூர் பேரூராட்சி அலுவலகத்துக்கு நேற்று இரவு 8 மணி அளவில் வந்தனர்.

பின்னர் அவர்கள் தங்களது வளர்ப்பு பிராணிகளை பேரூராட்சி அலுவலகம் முன்பு கட்டி போட்டு முற்றுகை போராட்டம் செய்தனர். இதுபற்றி தெரியவந்ததும் அரச்சலூர் இன்ஸ்பெக்டர் ஜெயமுருகன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் பொதுமக்கள் விடிய, விடிய முற்றுகை போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் இன்று காலை அரச்சலூர் பேரூராட்சி தலைவர் விஜயகுமார், இன்ஸ்பெக்டர் ஜெயமுருகன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்கள் செல்ல வழி ஏற்படுத்தி தர முடிவு செய்யப்பட்டது. மேலும் விரைவாக தார்சாலை அமைக்கவும் நடவடிக்கை எடுப்பதாகவும் கூறப்பட்டது.

இதையடுத்து இன்று காலை 8 மணி அளவில் பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்று கால்நடைகளை அவிழ்த்து கொண்டு வீடுகளுக்கு சென்றனர்.

இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News