ராசிபுரம் அருகே மதுரை வீரன் கோவிலை இடிக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு
- பொதுமக்களின் திடீர் மறியலால் ஒரு கிலோமீட்டர் நீளத்திற்கு வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து வரிசையாக நின்றன.
- 1 மணி நேரம் சேலம்-நாமக்கல் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதித்தது.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டையாம்பட்டி பிரிவு ரோடு அருகே மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.
அத்தனூர் பேரூராட்சி 4-வது வார்டுக்குட்பட்ட அந்தப் பகுதியில் சாலையின் ஓரத்தில் சாலையை அகலப்படுத்தவும், சாலையின் ஓரத்தில் உள்ள ஒரு சமுதாயத்திற்கு சொந்தமான மதுரைவீரன் கோவிலை எடுக்கப்போவதாகவும் நெடுஞ்சாலை துறையினர் கூறியதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை வீரன் கோவிலை சேர்ந்த சமுதாயத்தினர் இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த திடீர் மறியலால் ஒரு கிலோமீட்டர் நீளத்திற்கு வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து வரிசையாக நின்றன. இதனால் 1 மணி நேரம் சேலம்-நாமக்கல் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதித்தது.
இது பற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு ராசிபுரம் தாசில்தார் கார்த்திகேயன், நாமக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் ஆகியோர் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள், நாங்களும், எங்களுடைய குழந்தைகளும், உறவினர்களும் இந்த கோவிலில் நீண்டகாலமாக வழிபட்டு வருகின்றோம். பழமையான இந்த கோவிலை இடிக்க வேண்டாம் என கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து அதிகாரிகள், கோவிலை இடிக்காமல் சாலை விரிவாக்கும் பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.