உள்ளூர் செய்திகள்

பொன்னேரியில் பஸ் இயக்கப்படாததால் பயணிகள் திடீர் மறியல்

Published On 2023-09-06 06:35 GMT   |   Update On 2023-09-06 06:35 GMT
  • பொன்னேரி, பாடியநல்லூர், திருவொற்றியூர் பணிமனைகளில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
  • பஸ்சுக்காக காத்திருந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் ஆத்திரம் அடைந்தனர்.

பொன்னேரி:

பழவேற்காடு பகுதியை சுற்றிலும் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள் பெரும்பாலும் அத்தியாவசிய பணி மற்றும் பல்வேறு வேலைகளுக்கு மெதூர், பழவேற்காடு, திருப்பாலைவனம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வது வழக்கம். இதற்கு பெரும்பாலும் பொதுமக்கள் அரசு பஸ்களை பயன்படுத்தி வருகிறார்கள். தினமும் பழவேற்காடை சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட சுமார் ஆயிரத்துக்கும் மேற்படா்டோர் பஸ்களில் பயணம் செய்து வருகின்றனர்.

பொன்னேரி, பாடியநல்லூர், திருவொற்றியூர் பணிமனைகளில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பொன்னேரியில் இருந்து பழவேற்காடு வரை செல்லும் மாநகர பஸ் (எண்558பி) தினமும் இரவு 8 மணிக்கு இயக்கப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களாக இந்த பஸ் சரிவர இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்து வந்தனர்.

நேற்று இரவும் 8 மணிக்கு வரவேண்டிய பஸ் இரவு 9 மணியளவில் தாமதமாக வந்தது. இதனால் பஸ்சுக்காக காத்திருந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் பஸ்சை மறித்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் பொன்னேரி பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பஸ்சை இயக்க ஏற்பாடு செய்தனர். இதைத்தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

Tags:    

Similar News