உள்ளூர் செய்திகள்

சின்னசேலம் பிளஸ்-2 மாணவி உடலை பெற்றுக்கொள்ள பெற்றோர் சம்மதம்

Published On 2022-07-21 12:18 IST   |   Update On 2022-07-21 13:17:00 IST
  • நீதிகேட்டு மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
  • மாணவியின் பெற்றோர் கோரிக்கை ஏற்கப்படாமல் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

கள்ளக்குறிச்சி:

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். அவரது மகள் ஸ்ரீமதி (வயது 17). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்திமெட்ரிக் மேல்நிலை பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்த இவர் மர்மமானமுறையில் இறந்தார். மாணவியின் உடல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்தது.

ஐகோர்ட்டு உத்தரவுபடி மருத்துவகுழுவினர் மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்தனர். பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. இறுதிவரை மாணவியின் பெற்றோர் வரவில்லை. மாணவியின் உடல் பரிசோதனை நடந்தது பற்றியும், உடலை பெற்றுக்கொள்ளுமாறும் மாவட்ட வருவாய்துறை மூலம் பெரியநெசலூரில் உள்ள அவரது வீட்டில் வருவாய்துறையினர் நோட்டீஸ் ஒட்டினர். ஆனால் மாணவியின் உடலை பெற்றோர் வாங்க மறுத்து விட்டனர்.

இன்று 3-வது நாளாக மாணவியின் உடலை வாங்க பெற்றோர் வரவில்லை. இதனிடையே நீதிகேட்டு மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாணவியின் பெற்றோர் கோரிக்கை ஏற்கப்படாமல் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதன் எதிரொலியாக மாணவி ஸ்ரீமதியின் உடலை வாங்குவதற்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது. அவர்கள் இன்று மதியம் 2 மணிக்கு மாணவியின் உடலை பெற்றுக்கொள்வதாக உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இன்று மாலையே மாணவியின் உடல் சொந்த ஊரான கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பெரியநெசலூர் கிராமத்தில் அடக்கம் செய்யப்படும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News