காஞ்சிபுரம் அருகே ஊராட்சி தலைவியின் கணவருக்கு சரமாரி அரிவாள் வெட்டு
- காஞ்சிபுரம் அருகே கலியனுர் ஊராட்சியை சேர்ந்தவர் ஆறுமுகம்.
- வீட்டின் அருகே வந்து கொண்டிருந்த போது பின் தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் திடீரென ஆறுமுகத்தை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே கலியனுர் ஊராட்சியை சேர்ந்தவர் ஆறுமுகம். கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட பொறுப்பாளராக உள்ளார். மேலும் ஊத்துக்காடு பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராகவும் பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி வடிவுக்கரசி. இவர் ஊராட்சி மன்ற தலைவியாக உள்ளார்.
நேற்று இரவு உடல் நிலை பாதிக்கப்பட்ட மனைவி வடிவுக்கரசியை காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றார். பின்னர் அவர்கள் வீட்டுக்கு திரும்பி வந்தனர்.
வீட்டின் அருகே வந்து கொண்டிருந்த போது பின் தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் திடீரென ஆறுமுகத்தை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்றனர். உஷாரான ஆறுமுகம் அவர்களை தடுத்தார். இதில் அவரது கை,தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உடன் இருந்த மனைவி வடிவுக்கரசி கூச்சலிட்டார்.
அலறல் சத்தம்கேட்டு அப்பகுதி மக்கள் திரண்டதும் மர்மநபர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். பலத்த காயம் அடைந்த ஆறுமுகம் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜூலியர் சீசர், இன்ஸ்பெக்டர்கள் ஜெயக்குமார்,பேசில் பிரேம் ஆனந்த்,சுந்தர்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அங்குள்ள கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்த போது முககவசம் அணிந்து வந்த 2 வாலிபர்கள் அங்கிருந்து எந்தவித பதட்டமும் இல்லாமல் தப்பி செல்வது பதிவாகி உள்ளது.
ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக இந்த கொலை முயற்சி நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.