குடிபோதை தகராறில் நண்பனை தலையில் கல்லை போட்டு கொன்ற வாலிபர்
- பல்லாவரத்தை சேர்ந்தவர் சின்னதுரை பெயிண்டர்.
- பல்லாவரம் சாலையில் உள்ள ஒரு ஹார்டுவேர்ஸ் கடையின் முன்பு நின்று பேசி கொண்டிருந்தனர்.
தாம்பரம்:
பல்லாவரத்தை சேர்ந்தவர் சின்னதுரை (வயது29). பெயிண்டர். இவரும் மதுரையை சேர்ந்த ராஜா என்பவரும் நண்பர்களாக பழகி பெயிண்டிங் வேலைக்கு சென்று வந்தனர்.
நேற்று இரவு நண்பர்கள் இருவரும் சேர்ந்து மது குடித்தனர். பின்னர் அவர்கள் பல்லாவரம் சாலையில் உள்ள ஒரு ஹார்டுவேர்ஸ் கடையின் முன்பு நின்று பேசி கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களுக்கிடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜா, நண்பர் சின்னத்துரையை தீர்த்து கட்ட முடிவு செய்தார்.
இதற்காக அவர் சின்னத்துரை தூங்கும் வரை காத்திருந்தார். நள்ளிரவு ஆனதும் அவர் அங்கே படுத்து தூங்கினார். உடனே ராஜா அருகில் கிடந்த பெரிய கல்லை தூக்கி சின்னத்துரையின் தலையில் போட்டார்.
இதில் சின்னத்துரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் ராஜாவும் நண்பரின் உடல் அருகிலேயே மதுபோதையில் தூங்கி விட்டார்.
இன்று காலை ராஜா எழுந்து பார்த்த போது மது போதையில் நண்பர் சின்னத்துரையை கொலை செய்து விட்டதை நினைத்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் பல்லாவரம் போலீசில் சரண் அடைந்தார்.
அப்போது ராஜா போலீசாரிடம் கூறும்போது, மதுபோதையில் நண்பர் சின்னத்துரையுடன் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த நான் சின்னதுரை தூங்கும் வரை காத்திருந்து அருகில் இருந்த கல்லை எடுத்து தலையில் போட்டு கொலை செய்துவிட்டேன் என்று கூறி உள்ளார்.
போலீசார் சின்னதுரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று ராஜாவிடம் போலீசார் தொடர்ந்து விசாரனை செய்து வருகின்றனர்.