உள்ளூர் செய்திகள்

பாளை மார்க்கெட் கடைகளை இடிக்க எதிர்ப்பு: வியாபாரிகள் திடீர் போராட்டம்- 10 பேர் கைது

Published On 2023-02-03 06:59 GMT   |   Update On 2023-02-03 06:59 GMT
  • பாளை காந்திமார்க்கெட் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்படுகிறது.
  • போராட்டத்தில் ஈடுபட்ட 10-க்கும் மேற்பட்ட வியாபாரிகளை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை:

பாளை காந்திமார்க்கெட் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்படுகிறது. இதையொட்டி அங்கிருந்த 538 கடைகளை காலிசெய்யுமாறு மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

இதற்காக அருகில் உள்ள ஜவஹர் மைதானத்தில் 178 தற்காலிக கடைகளும், பழைய போலீஸ் குடியிருப்பில் 373 தற்காலிக கடைகளும் அமைத்து கொடுக்கப்பட்டது.

இதையொட்டி கடந்த மாதம் கடைகளை இடிக்கும் பணி தொடங்கியது. அப்போது பொங்கல் பண்டிகை உள்ளிட்ட பண்டிகைகள் வர உள்ளதால் அது வரை காலஅவகாசம் வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதனைத்தொடர்ந்து இன்று அந்த கடைகளை இடிக்கும் பணிக்காக அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்துடன் அங்கு சென்றனர். அப்போது பாளை பகுதி அ.தி.மு.க. செயலாளர் வக்கீல் ஜெனி தலைமையில் வியாபாரிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்ததும், சம்பவ இடத்திற்கு மாநகர துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன், உதவி கமிஷனர் பிரதீப், இன்ஸ்பெக்டர் வாசிவம் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் கடைகளை இடிக்கக்கூடாது என தெரிவித்தனர். சில வியாபாரிகள் பொக்லைன் எந்திரத்தின் முன்னாள் படுத்து உருண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 10-க்கும் மேற்பட்ட வியாபாரிகளை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-

சமீபத்தில் காந்தி மார்க்கெட், ஐக்கிய சங்கம் சார்பில் தலைவர் சாலமோன், செயலாளர் பெரிய பெருமாள் தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் மார்க்கெட் கடை விவகாரத்தில் மாநகராட்சி, வியாபாரிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றியதால் அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பது என தீர்மானிக்கப்பட்டது.

நாங்கள் கேட்ட தற்காலிக கழிப்பறை வசதிகள், நடைபாதை வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளனர். ஆனால் தற்காலிக கடைகளுக்கான மின் இணைப்பினை வியாபாரிகள் செய்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துதான் இன்று ஒரு பகுதி வியாபாரிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்றனர்.

Tags:    

Similar News