உள்ளூர் செய்திகள் (District)

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பெரிய வெங்காயம் வரத்து அதிகரிப்பு- கிலோ ரூ.12-க்கு விற்பனை

Published On 2023-03-19 10:17 GMT   |   Update On 2023-03-19 10:17 GMT
  • வழக்கமாக தினமும் 40 லாரிகள் வரை மட்டுமே வந்து கொண்டிருந்த வெங்காயத்தின் வரத்து கடந்த சில நாட்களாக அதிகரித்து உள்ளது.
  • சந்தைக்கு இன்று 50 லாரிகளில் பெரிய வெங்காயம் விற்பனைக்கு குவிந்தது.

போரூர்:

கோயம்பேடு காய்கறி மார்கெட்டுக்கு ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து வெங்காயம் தினசரி விற்பனைக்கு வருகிறது.

வழக்கமாக தினமும் 40 லாரிகள் வரை மட்டுமே வந்து கொண்டிருந்த வெங்காயத்தின் வரத்து கடந்த சில நாட்களாக அதிகரித்து உள்ளது. சந்தைக்கு இன்று 50 லாரிகளில் பெரிய வெங்காயம் விற்பனைக்கு குவிந்தது. இதனால் மொத்த விற்பனை கடைகளில் ஆந்திரா வெங்காயம் ரகத்தை பொறுத்து ரூ.12 வரை விற்கப்பட்டது. நாசிக் மற்றும் கர்நாடகா வெங்காயம் ரகத்தை பொறுத்து ஒரு கிலோ ரூ.12 முதல் ரூ15 வரை விற்பனை ஆனது. பெரிய வெங்காயத்தின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் சென்னையில் முக்கிய தெருக்களில் தள்ளுவண்டி மூலம் வியாபாரிகள் பலர் கூவி, கூவி வெங்காய விற்பனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதுகுறித்து வெங்காய வியாபரிகள் கூறும்போது, 'ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் பரவலாக வெங்காயம் உற்பத்தி வழக்கத்தை விட 2 மடங்காக அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பெரிய வெங்காயம் வரத்து அதிகரித்து விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. வரும் நாட்களிலும் வெங்காயத்தின் விலை உயர வாய்ப்பு இல்லை' என்றனர்.

Tags:    

Similar News