உள்ளூர் செய்திகள்

போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்த ஊட்டி பஸ் நிலைய சாலை.

கடந்த 5 நாட்களில் ஊட்டி சுற்றுலா தலங்களை ஒரு லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்

Published On 2022-10-06 04:09 GMT   |   Update On 2022-10-06 04:09 GMT
  • சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் சுற்றுலா தல பகுதிகளில் உள்ள கடைகளிலும் வியாபாரம் களைகட்டியது.
  • கடந்த 5 நாட்களில் ஒரு லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து சென்றுள்ளதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஊட்டி:

காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை பண்டிகை என தொடர் விடுமுறை காரணமாக மலை மாவட்டமான நீலகிரிக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பம், குடும்பமாக வந்தனர்.

இதனால் நீலகிரியில் உள்ள சுற்றுலா தலங்கள் களைகட்டியது. அவர்கள் சுற்றுலா தலங்களை தங்கள் குடும்பத்தினருடன், பார்த்து ரசித்து, அங்கு நிலவிய இதமான காலநிலையை அனுபவித்ததோடு மட்டுமல்லாமல் செல்பி புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் சுற்றுலா தல பகுதிகளில் உள்ள கடைகளிலும் வியாபாரம் களைகட்டியது.

கடந்த 5 நாட்களில் ஒரு லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து சென்றுள்ளதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

நீலகிரி மாவட்டத்தில் இருந்து வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் வெளி மாவட்டங்கள் மற்றும் நீலகிரி மாவட்டத்துக்குள் என 170 வழித்தடங்களில் 320 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் ஊட்டி கிளையில் இருந்து மட்டும் 170 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

தொடர் விடுமுறை முடிந்து சொந்த ஊர் செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் கூட்டம் காரணமாக ஊட்டி பஸ் நிலையத்தில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

கூடுதல் பஸ்கள் இயக்காததால் அவர்கள் நீண்ட நேரம் பஸ் நிலையத்தில் காத்திருந்தனர். மேலும் ஒரு சில பஸ்கள் வந்த போது வேகமாக முண்டியடித்து ஓடி சென்று பஸ்சில் ஏறி இடம் பிடித்தனர். குறிப்பாக, கோவைக்கு செல்ல குறிப்பிட்ட நேரத்திற்கு பஸ் இல்லாததால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

இதுகுறித்து பயணிகள் கூறுகையில், தொடர் விடுமுறை, பண்டிகை மற்றும் முகூர்த்த நாட்களில் இதே நிலை நிலவுவதாகவும், அது மாதிரியான சமயங்களில் கூடுதல் பஸ் இயக்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், அதே சமயத்தில் கூட்டம் அதிகமாக இருந்தால் அவர்கள் வரிசையாக செல்வதற்கு மாற்று ஏற்பாடாக செய்ய வேண்டும், என்றனர்.

இதேபோல் மாவட்டத்தில் நேற்று கூடலூர், கோத்தகிரி, குன்னூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பஸ்களில் இடம் கிடைக்காமல் பயணிகள் அலைமோதினர்.

Tags:    

Similar News