நிலக்கோட்டை அருகே ஆன்லைனில் பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் மோசடி- ஒருவர் கைது
- வாடிக்கையாளர்களை கவரும் வகையில் கவர்ச்சிகரமான விளம்பரம் செய்து மோசடி செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவைச் சேர்ந்தவர் முத்துசென்ராயன் (வயது 38). விவசாயம் செய்து வருகிறார். இவர் ஆன்லைனில் வந்த ஒரு விளம்பரத்தில் ரூ.1000 கொடுத்தால் 150 நாட்கள் கழித்து ரூ.3000 தரப்படும் என்பதை பார்த்தார்.
இதனையடுத்து குறிப்பிட்ட செல்போன் எண்ணுக்கு பேசி அந்த நிறுவனத்தின் ஊழியர்களிடம் பேசினார். அவர்கள் ரூ.10 லட்சம் டெபாசிட் செய்தால் ரூ.30 லட்சம் கொடுப்போம் என்று கூறியுள்ளனர்.
இதனை நம்பி முத்து சென்ராயன் மதுரை கொடும்பு ஆசாரி தெருவைச் சேர்ந்த தனியரசன் (49) என்பவரிடம் ரூ.15 லட்சத்தை கொடுத்தார். 150 நாட்கள் கழித்து ரூ.45 லட்சம் கிடைக்கும் என்று எதிர்பார்த்த முத்து சென்ராயனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
அவருக்கு பல முறை போன் செய்தும் எடுக்கவில்லை. இதனையடுத்து நிலக்கோட்டை பஸ் நிலையத்தில் முத்துசென்ராயன் நின்று கொண்டு இருந்தபோது அவ்வழியே சென்ற தனியரசனை மடக்கி பிடித்தார்.
பின்னர் தான் கட்டிய பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணத்தை தராமல் தரக்குறைவாக பேசியுள்ளார். இதனையடுத்து அவரை பிடித்து நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். சப்-இன்ஸ்பெக்டர் தயாநிதி தலைமையிலான போலீசார் தனியரசனை பிடித்து விசாரித்ததில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
இவர் மற்றும் மேலும் சிலர் இதே போல் ஆன்லைனில் கூடுதல் பணம் தருவதாக கூறி கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்துள்ளது தெரிய வந்தது. இதனிடையே தனியரசன் மோசடி பேர்வழி எனத் தெரிந்ததும் அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்த ஏராளமானோர் நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் குவிந்தனர். அவர்கள் தாங்கள் பல லட்சம் டெபாசிட் செய்து காத்திருப்பதாக தெரிவித்தனர். தனியரசன் மதுரை, திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களிலும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் கவர்ச்சிகரமான விளம்பரம் செய்து மோசடி செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மேலும் சிலரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்ம்பவம் நிலக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.