உள்ளூர் செய்திகள்

பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ள ராக்காச்சி அம்மன் கோவில்.

ராஜபாளையத்தில் கோவிலை பூட்டி சீல்வைத்த மர்மநபர்கள்- போலீசார் விசாரணை

Published On 2023-04-12 15:06 IST   |   Update On 2023-04-12 15:06:00 IST
  • வருவாய்த்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்கள் கோவிலுக்கு சீல்வைக்கவில்லை என தெரிவித்தனர்.
  • போலீசார் வழக்குப் பதிவு செய்து கோவிலை பூட்டி சீல் வைத்தது யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜபாளையம்:

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் செண்பகத்தோப்பு ரோடு, மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் பழமையான ராக்காச்சி அம்மன் கோவில் உள்ளது. ராஜபாளையம் சங்கரன் கோவில் ரோடு பகுதியைச் சேர்ந்த நண்டு பூசாரி (எ) ராக்கப்பன் இந்தக் கோவிலின் தர்ம கர்த்தாவாகவும், பரம்பரை பூசாரியாகவும் இருந்து வருகிறார்.

இவர் கடந்த 10-ந்தேதி கோவிலில் பூஜைகளை முடித்துவிட்டு, நான்கு பக்கமும் உள்ள கதவுகளை பூட்டிவிட்டு வந்தார். இந்த நிலையில் இன்று காலை பூஜை செய்வதற்காக மீண்டும் கோவிலுக்குச் சென்றார். அப்போது கோவிலின் கதவில் இருந்த பூட்டில் வெள்ளைத் துணி சுற்றப்பட்டு சீல்வைக்கப்பட்டிருந்தது.

அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், மற்ற பக்கங்களில் உள்ள கதவுகளை சென்று பார்த்தார். அந்த கதவுகளிலும் பூட்டுகள் போட்டு சீல் வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்கள் கோவிலுக்கு சீல்வைக்கவில்லை என தெரிவித்தனர்.

யாரோ மர்மநபர்கள் கோவிலுக்கு சீல்வைத்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து மம்சாபுரம் போலீஸ் நிலையத்தில் ராக்கப்பன் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து கோவிலை பூட்டி சீல் வைத்தது யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News