உள்ளூர் செய்திகள்

அரசியல் சட்டத்தை சீர்குலைக்கும் வகையில் தேர்தல் ஆணையர் நியமனம் நடந்துள்ளது- முத்தரசன்

Published On 2022-11-25 09:20 GMT   |   Update On 2022-11-25 09:20 GMT
  • ஆளுநரை கண்டித்து டிசம்பர் 29-ந்தேதி ஆளுநர் மாளிகைக்கு முன்பாக முற்றுகைப் போராட்டம் நடைபெறும்.
  • நாளை விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்தப்பட உள்ளது.

திருச்சி:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன் திருச்சி மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. நாட்டில் உள்ள சுதந்திரமான அமைப்புகள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. அந்த அமைப்புகள் ஒன்றிய அரசின் உத்தரவுகளுக்காக காத்திருக்கின்றன.

அரசியல் சட்டத்தை ஒன்றிய அரசு சீர்குலைத்து வருகிறது என்பதை நிரூபிக்கும் விதமாக தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் நடந்துள்ளது. இந்த அவசர நியமனம் குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. இந்த நாட்டை சனாதனம் ஒற்றுமைப்படுத்தியது என ஆளுநர் பேசிவருகிறார். உண்மையில் சனாதனம் மக்களை பிளவுபடுத்தியது. ஆளுநர் ரவி தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு ஆர்.எஸ்.எஸ்.சில் இணைந்து அவர் செயல்படட்டும். ஆளுநரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அவரை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்.

ஆளுநரை கண்டித்து டிசம்பர் 29-ந்தேதி ஆளுநர் மாளிகைக்கு முன்பாக முற்றுகைப் போராட்டம் நடைபெறும். நாளை (26-ந்தேதி) விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்தப்பட உள்ளது.

மின்வாரிய கணக்கெடுப்பு அட்டையுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கு காலக்கெடு வழங்க வேண்டும். அதுவரை மின் கட்டணம் வசூலிக்க மாட்டோம், மின் இணைப்பை துண்டிப்போம் என்ற முடிவை மின்வாரியம் கைவிட வேண்டும். தி.மு.க. தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகள் சிலவற்றை நிறைவேற்றியுள்ளது.

தமிழ்நாட்டில் காவல் துறையால் தேடப்படும் நபர்கள் பா.ஜ.க.வில் அடைக்கலம் பெற்றுள்ளனர். அங்கு அவர்கள் பொறுப்புகளிலும் இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News