உள்ளூர் செய்திகள்

ஆத்தூர் அருகே விபத்து- மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி வாலிபர் பலி

Published On 2023-09-01 05:50 GMT   |   Update On 2023-09-01 05:50 GMT
  • முக்காணி பங்க் அருகே செல்லும்போது பின்னால் வேகமாக வந்த வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
  • தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் சுமார் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆத்தூர்:

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள முக்காணி தேவர் தெருவை சேர்ந்தவர் முத்து ராமலிங்கம். இவருக்கு பாதாளவடிவு என்ற மனைவியும், 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.

இதில் இளைய மகன் மாதவன் (வயது 24) கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் தனது ஊரில் நடைபெற்ற கோவில் கொடை விழாவிற்காக ஊருக்கு வந்துள்ளார். நேற்று இரவு பூக்கள் வாங்குவதற்காக பழையகாயலுக்கு அவரது நண்பர் ஏரலை சேர்ந்த சங்கரலிங்கம் என்ற கோகுல் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

முக்காணி பங்க் அருகே செல்லும்போது பின்னால் வேகமாக வந்த வேன், இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து 2 பேரும் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தனர். மாதவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக இருவரையும் மீட்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை ஆத்தூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே மாதவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மாதவனின் அண்ணன் இசக்கிதுரை (34) கொடுத்த புகாரின் பேரில் ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் ஆத்தூர் தனியார் மருத்துவமனைக்கு முன்பு திருச்செந்தூர்-தூத்துக்குடி சாலையில் உறவினர்கள், வேன் டிரைவரை கைது செய்ய கோரி நேற்று இரவு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின்பு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் சுமார் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News