உள்ளூர் செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 19 ஆயிரத்து 500 கன அடியாக அதிகரிப்பு

Published On 2022-07-29 04:53 GMT   |   Update On 2022-07-29 04:53 GMT
  • மேட்டூர் அணைக்கு நேற்று காலை 16 ஆயிரத்து 364 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 19 ஆயித்து 500 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.
  • அணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு 19 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 500 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

மேட்டூர்:

கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணை நிரம்பியதால் அந்த அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீர் தமிழகத்திற்கு தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

தற்போது 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 16 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் காவிரியில் வெளியேற்றப்படுகிறது. இந்த தண்ணீருடன் மழை நீரும் சேர்ந்து ஒகேனக்கல் வருகிறது. ஒகேனக்கல்லில் நேற்று காலை வினாடிக்கு 17 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து மாலையில் 20 ஆயிரத்து 500 கன அடியாக அதிகரித்தது.

இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதையடுத்து ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும், காவிரி கரைக்கு செல்லவும் 20-வது நாளாக தடை நீடிக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றின் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் 24 மணிநேரமும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை 16 ஆயிரத்து 364 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 19 ஆயித்து 500 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு 19 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 500 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் அணையில் இருந்து மொத்தம் வினாடிக்கு 19 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த 4 நாட்களாக 120 அடியாக நீடிக்கிறது. இதனால் கடல் போல காட்சி அளிக்கிறது. இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து செல்கிறார்கள். ஆடி அமாவாசையான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் மேட்டூர் அணையை பார்வையிட்டனர்.

Tags:    

Similar News